Vande Bharat
வந்தே(ன்) பாரத், நொந்தே(ன்) பாரத் ...
பிரதமர் பொங்கு பொங்கென்று பொங்குகிறாரே .. அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்க ஒரு பிரயாணம்.
முன்பு Shatabdi என்று திரிந்து கொண்டிருந்த இரயிலின் பயண நேரத்தை பட்டி பார்த்து டிங்கரிங் செய்து பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
குற்றம் கூறுவதற்கு முன்பு ஒரு நல்ல observation. ரயில் வண்டிகள் புதியவை என்பதால் சுத்தமாக இருக்கின்றன. கழிவறைகள் பளிச்சென்று இருக்கின்றன.
பாராட்ட வேண்டிய மற்றொரு விஷயம் ஜெனரல் கோச் கிடையாது.
நாடு சுபிட்சமாக இருப்பதாக ஊறுகாய் மாமி பறை சாற்றுவது உண்மையாக இருப்பதாலோ அல்லது மக்கள் செலவு செய்ய அஞ்சாததாலோ தெரியவில்லை .. கம்பார்ட்மெண்ட் நிறைந்திருந்தது. பயணம் செய்பவர்கள் இதற்கு முன்பு பிருந்தாவன், எக்ஸ்பிரஸ் போன்ற தினசரி ரயில்களில் 2nd sittingல் சென்றவர்களே.
ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கும் இரயிலை போட்டோ எடுத்துக்கொண்டிருந்த வாலிபன் கையிலிருந்த போன் நழுவி தாண்டவளத்தினிடையே விழுந்தது.
எப்படியாவது கீழே இறங்கி எடுக்கவேண்டுமென்று முயற்சித்த அன்பரை ரயில்வே ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. போட்டோ எடுத்து முகநூலில் போடாமலே இருந்தாலும் பிரயாணிக்கலாமென்று.
சில தொல்லைகளிலிருந்து இன்னமும் விடுதலை கிட்டவில்லை ..
கைபேசியில் உரக்கப் பேசும் சீமான்கள் மற்றும் சீமாட்டிகள்.
மகள் சான் பிரான்சிஸ்கோவிலிருப்பது ஊரெல் லாம் பறை சாற்றும் மாமி.
பக்கா தயிர் சாதமாக இருந்தாலும் ஹிந்தியில் பாத்து பாத்தென்று பாத்தும் மாமாக்கள்.
Work From Home கொடுமையினால் அலுவலக callகளை அம்பானி புண்ணியத்தில் ரயிலில் எடுக்கும் வாலிப, வாலிபிகள்.
Headphone போட்டு தொலைந்தால் office கொடுமைகள் மற்றவர்கள் சகித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது.
NDA எனும் வில்லங்கம் இருந்தாலும் கவலைப்படாமல் பயண நேரத்தை உபயோகமாக கழிக்கும் நவநாகரிக கொத்தடிமைகள்.
புதிதாக வாங்கிய iPadஐ திருட்டுத்தனமாக தரவிறக்கம் செய்த சினிமா பார்க்க மட்டுமே பயன்படுத்தும் விடலைகள்.
நிறுத்தம் வரும்போது தகுந்த அறிவிப்புகள். ஆனாலும் நாமக்கல்லை "நமக்கல்" என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது.
யாரோ புண்ணியவான் கொடுத்த feedback போலும். அடுத்த முறை சரியாக கூவியது.
தானியங்கி கதவுகள், சாய வேண்டாம் என்று பாதுகாப்பு அறிவிப்பு.
என்னதான் வந்தே பாரத்தாக இருந்தாலும் ஓடும் தண்டவாளம் அதே பழைய பேரிச்சம் பழம்தானே.
சில நிமிடங்கள் வேகமெடுத்தாலும் அப்புறம் சாதாரண வேகம்தான்.
வந்தே பாரத் மோதி மாடு பரிதாபமாக சாவு என்று செய்தித்தாளில் தலைப்பு சேதி.
இரயில் ஓடும் தண்டவாளத்தில் மாட்டை மேய விட்ட மர மண்டையை என்ன செய்ய ?
இதில் இரயிலின் முன் பாகம் சேதமடைந்ததை படமெடுத்து ஏளனம் வேறு ..
மாடு மேல் வண்டியேற்றி பரிசோதனை செய்துதான் இனிமேல் வெள்ளோட்டம் விடவேண்டும் போலும்.
என்னதான் "Make In India" பீத்திக்கொண்டாலும் உள்ளே இருந்த பல விஷயங்கள் "இறக்குமதி"தான்.
சாப்பாட்டு கொடுமைக்கு வருவோம். இதற்குமுன் Shatabdiல் கிண்டிய அதே உப்புமாதான்.
நாகேஷ் கிழித்து சாப்பிடும் அப்பளம் பற்றி பேசியிருப்பார், இங்கு உரித்து சாப்பிடும் இட்லி. உறைந்து போன பொங்கல்.
சாம்பார் என்ற பெயரில் பருப்பு தண்ணீர். சில நேரங்களில் கடலை மிட்டாய், சில நேரங்களில் Millet உருண்டை
தவிட்டு பிஸ்கெட். வெந்நீரில் கரைத்து குடிக்கும் தேநீர் அல்லது காபி.
கூட வந்தது நாக்கு செத்த கும்பல் போலும். இந்த திராபையை ஆஹா ஓஹோ என்று சிலாகித்து ஊரில் இருக்கும் உறவுகளுக்கு கைபேசியில் commentary.
பரிமாறும் சிப்பந்திகள் எல்லாரும் வடக்கன்ஸ் only.
தமிழ் நாட்டில் அல்லது கர்நாடகத்தில் இருந்து தமிழ் நாடு வழியாக கேரளம் செல்லும் இரயிலில் தெக்கன் எவனும் இல்லை.
ஒரு மாமா டிக்கெட் போடும் போது வீராப்பாக சாப்பாடு வேண்டாமென்றுவிட்டு வண்டியேறிய பிறகு தான் diabetic என்பது நினைவுக்கு வந்தது போலும்.
தமிழ் தெரியாத "அவனி"டம் வம்பு. அவன் போடா கூந்தல் என்று போய் விட்டான். இவர் பாட்டுக்கு கூப்பாடு. ரத்த கொதிப்பும் உண்டு போலும்.
ஒரு காலேஜில் உபன்யாசம் செய்து முடித்து விட்டு ஒரு வழியாக சென்ற வேலை முடிந்து அடுத்த வந்தே பாரத்தில் திரும்பினோம்
கையில் கொஞ்சம் மூட்டை இருந்ததால் வண்டியேற்றி விட சகாயத்திற்கு இரண்டு உபாத்யாயர்களை அனுப்பி இருந்தார்கள்.
சரியான நேரத்திற்கு இரயில் வந்தது. ஏற்றி விட வந்த அன்பர்கள் சீட் வரை வந்து மூட்டையை மேலே ஏற்றும் நேரத்திற்கு வண்டி கிளம்ப அலாரம் அடித்தது.
அன்பர்கள் தள்ளு முள்ளுவை தாண்டி வாயிலுக்கு செல்லும்போது வண்டி கிளம்பியாச்சு. அடுத்த ஸ்டேஷன் சேலம். ஒரு மணி நேர டிக்கெட்டில்லா பயணம்.
சேலம் வந்தவுடன் திரும்பவும் "போய்ட்டு வரோம்" என்று சொல்ல சீட் வரை வந்து மறுபடியும் கதவு மோதிக்கொள்ளுமோ என்ற பயம்.
நல்ல வேளைக்கு அங்கிருந்தே இறங்கி பிளாட்பாரத்திலிருந்து "டாடா" காண்பித்தார்கள்.
மடியில் வேறு யாரும் உட்காரவில்லை. ஜம்போ மாமிகள் யாரும் நெருக்கி தள்ளவில்லை.
நிறுத்தங்கள் குறைவு. சுமார் மூஞ்சி குமார் சாப்பாடு. சுத்தமான கழிப்பறை.
மற்றபடி பிரமாதம் என்று சொல்ல ஒன்றுமில்லை ..


0 Comments:
Post a Comment
<< Home