Bangalore - Here I come !
கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள். பட்டணம் சேர்ந்து கெட்டவன் நான். கற்ற களவு இன்னும் மறக்கவில்லை. தாத்தாவின் கண்டிப்பான வளர்ப்பில் ஒரு நல்ல பையன் உருவாகியிருந்தான். "ததோ யுத்த பரிஷ்ராந்தம்", "ஊர்த்துவ மூலம் அதஸ்ஸாகம்", "ஸ்ரீ பூர்ண போத குரு தீர்த்த பயோப்தி பாரா" என்று துவங்கும் பல துதிகள் தாத்தாவின் குரலில் மனனமாகியிருந்தன. மனதில் பலமான ஆன்மிக அஸ்திவாரம் இடப்பட்டிருந்தது. என்ன குட்டிக்கரணம் போட்டாலும் தடம் பிறழாமல் இருக்க இந்த அஸ்திவாரம் பேருதவியாக இருந்தது. பத்தாம் வகுப்பு முடிந்து மேல்நிலையில் சேர்ந்திருந்த போது நண்பன் ஒருவன் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை காட்டினான். இயற்பியல் ஆய்வகத்தில் "Youngs Modulus" பரிசோதனையில் கம்பி அறுப்பது. வேதியியல் ஆய்வகத்தில் டெஸ்ட் tube ஆட்டையா போடுவது, உயிரியல் ஆய்வகத்தில் அறுப்புக்கு வைத்திருந்த எலியை ஓவிய ஆசிரியையின் மேசையில் ஒளித்து வைத்தது என்று பல ஜாலங்கள் செய்து வந்த காலத்தில் "After SSLC what Next" என்பது போல இருந்த தொழிற்கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரம் மனதை கவர்ந்தது.
விண்ணப்பம் வாங்க பெங்களூர் வந்தேன். மாமா ராஜாஜி நகரில் இருந்து கூட வந்தார். அவருக்கும் இந்த தொழிற்கல்வி பற்றி அபிப்பிராயம் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தோம். Entrance Test எனப்படும் ஸம்ப்ரதாயத்துக்கு அழைப்பு வந்தது. தாத்தாவுக்கு ஒரே நிபந்தனை. "தேர்ச்சி பெற வேண்டும்". மற்றவை பிறகு. செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் இரண்டாவது மாடியில் தேர்வுகள் நடைபெற்றன. அந்த அழகான கல் கட்டிடம் சமீபத்தில் இடித்து தள்ளப்பட்டது மனதுக்கு சங்கடம். போட்டிக்குரிய தேர்வு என்று அது வரை சந்திக்காதது ஒரு மெல்லிய பயத்தை ஏற்படுத்தியது. டூ இண்டு டூ இண்டு டூ = டுட்டுடூ போன்ற சிரமமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
குளிர் நடுக்கியதில் மூச்சா வந்தது. சுண்டு விரல் காட்டி அனுமதி கேட்டதற்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதியாக வேண்டும். மூச்சா போனதற்கு என்று எக்ஸ்ட்ரா நேரம் கொடுக்கப்பட மாட்டாது என்று கண்டிப்பாக கூறினர், இரண்டு மாடி இறங்கி வந்து காரியத்தை முடித்த போது படம் வரைந்து பாகம் குறித்த கல்லூரி மாணவர்களின் கைங்கரியங்கள் கண்ணில் பட்டன. கவர்ந்தது - "இதற்கு மேல் மூச்சா போனால் தீயணைப்பு படையில் சேரவும்" என்ற உயரத்தை குறிக்கும் கோட்டுடன் கூடிய குறிப்பு.
இவையெல்லாம் தாண்டி வந்த போது ஒரு பொருளை சில மணித்துளிகள் காட்டிவிட்டு படம் வரைய சொன்னார்கள். எனக்கு வந்தது ஒரு spanner. படம் சுமாராக வரைந்திருந்தாலும் "Vanadium Steel" என்ற வார்த்தைகள் கண்ணில் பட்டது. அதை மட்டும் தெளிவாக எழுதி வைத்தேன். தேர்ந்தேடுக்கப் பட்டதற்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். நேர்முகத் தேர்வுக்கு மதியம் போல் அழைத்தார்கள்.
பொது அறிவு என்பதற்கு ஒரு தனியாக கோனார் தமிழ் உரை போல புத்தகம் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பொழுது போக்குகள் என்ன என்ற கேள்விக்கு தபால் தலைகள் சேகரிப்பது என்றேன். ஜெர்மனியின் தபால் தலையில் என்ன எழுதியிருக்கும் என்று ஆரம்பித்து CTO என்றால் என்ன என்ற குடைந்தார். எல்லாம் முடிந்து ஊர் வந்து சேர்ந்தேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்த எனது சகோதரி வந்தார். NTTFல் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டதாக தந்தி வந்திருப்பதாக கூறினார்.. பிரியா விடை ஏதும் கூறியதாக நினைவில்லை. மூட்டை முடிச்சுடன் பெங்களூரு வந்து சேர்ந்தேன். பூணல் போடுவது என்ற ஸம்ப்ரமம் நடந்தேறாததால் சண்டாளனாகவே பெங்களூர் வந்தேன் .
ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் அரசு பள்ளியில் படித்தவன் நான். படிப்பதிலிருந்த சுட்டித்தனம் ஆங்கிலம் பேசுவதில் இருக்கவில்லை. தமிழ் சினிமாவில் வரும் பால்மணம் மாறாத பாலகன் "விவேக்" போல சைடில் பால் கக்கிக்கொண்டே #NTTF சேர்ந்தேன். 30 பேர் கொண்ட batchல் பலர் தமிழ் பேசியது வசதியாக போயிற்று என்றாலும் சரளமாக ஆங்கிலம் பேச வராதது ஒரு பலவீனமாகவே இருந்தது. பட்டணத்தில் படித்த சக மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசித்தள்ளினர். எஸ், நோ, ஓகே என்பதை தவிர மற்றவைகள் வாக்கியமாகி வாயில் வருவதற்குள் சம்பாஷணை முடிந்திருந்தது. Vocabularyஐ அதிகப்படுத்த ஒரே வழி novel படிப்பதுதான் என்று தீர்மானம் செய்து Nick Carter மற்றும் Carter Brown நாவல்களை தேர்ந்தேடுத்தேன். ஏன் இந்த இரண்டு கதாசிரியர்கள் என்ற கேள்வி எழுப்பும் நக்கீரர்கள் கூகிள் செய்து images பார்க்கவும். கூடவே James Hadley chase, Harold Robbinsம் உண்டு. சகட்டு மேனிக்கு படித்து தள்ளினேன். Stone For Danny Fisher இன்றும் மனதில் நிற்கிறது ...
அப்படி இப்படியாக இரண்டு செமெஸ்டர் கழிந்தது. தட்டு தடுமாறி சமாளிக்க முடிந்தது. Irwing Wallaceகு தேறியிருந்தேன். வார இறுதியில் ஆங்கிலப் படங்கள் பார்த்ததும் உண்டு. Subtitle போட்ட DVD எல்லாம் அப்போது கிடையாது. கவனித்து கேட்டால் உண்டு இல்லையேல் விவேக்கும் விக்ரமும் ஆங்கிலப்படம் பார்த்தது மாதிரி.
அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்கள் துணை நின்றனர். எனக்கு 3 வயது மட்டுமே மூத்த மாமாவும் இதில் சேர்த்தி. அவர்களுக்கு நான் ஒரு சின்ன பயல். இவனை ஏன் கெடுப்பானேன் என்ற நல்ல எண்ணம். தள்ளியே வைத்திருந்தனர். ஒரு நாள் போனால் போகிறது என்று ஒரு Joke சொன்னார்கள். சிரித்து வைத்துவிட்டு நான் ஒரு Joke சொல்லவா என்று கேட்டேன். அசைவம் .. அரண்டு போனார்கள். ஜோதியில் ஐக்கியமானேன். யாருக்காவது இந்த joke வேண்டுமென்றால் தொலை பேசியில் அழைக்கவும். சத்தம் போட்டு சிரித்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல ..
இன்னமும் வரும்...


0 Comments:
Post a Comment
<< Home