Comic fan

Sunday, December 28, 2025

Shatabdi

 அதோ கதி with சதாப்தி !

அப்போதெல்லாம் ப்ருந்தாவன், லால்பாக், மெயில் போன்ற சில இரயில்களே புழக்கத்தில் இருந்தன. என்னை மாதிரி அக்கா வீட்டிற்கும் கட்டை புளிய மரத்திற்கும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு பஸ் ஒரு தலைவலி. அரசுப் பேருந்து ஒரு விதமான தலை வலி என்றல் தனியார் பேருந்துகள் இன்னொரு மாதிரி திருகுவலி. முதலிரண்டு ரயில்களில் பயணிப்பது ஒரு விதமான சொல்ல முடியாத வேதனை. எதிரெதிர் இருக்கைகள், கால் நீட்டி அமர முடியாதவாறு வடிவமைக்கப்பட்டிருந்தன. முன் பதிவு செய்திருந்தாலும், மற்ற பயணிகளின் ஆதிக்கம் மற்றும் மிரட்டல் அதிகம். "நீ ரிசெர்வ் பண்ணிட்டு வந்துட்டா, பெரிய பருப்பா ?" என்று ஆரம்பிக்கும். மூச்சா போக வழி இல்லாமல் அங்கிங்கினாதபடி எங்கும் கூட்டம். வழி விடுறீங்களா? இல்லே இங்கேயே போகவா? என்று மிரட்டினால் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கும். ஜன்னலோரம் சீட் கிடைத்தால் தப்பித்தோம். மத்தியில் மாட்டிக்கொண்டால் வைத்து நசுக்கி விடுவார்கள். கடைசி சீட் வாய்த்தால் (aisle seat) நிற்பவர்கள் பிருஷ்ட பாகத்தை தோளில் வைத்து தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். #metoo அங்கே செல்லாது ..
நம்ம ஊர் பயணிகளுக்கு மூட்டை கட்டுவதென்றால் மகா பிரியம். வீடு மாற்றும் கணக்குக்கு லக்கேஜ் இருக்கும். "ஏம்ப்பா, சித்தே காலை நகத்து" அப்படின்னு சொல்லிட்டு சொருகிடுவாங்க. அப்படியே இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு உக்காந்தா யாராவது கைக்குழந்தையுடன் காட்பாடியில் ஏறுவார்கள். ரிசெர்வ் செய்திருக்கும் நம்மை ஏதோ கற்பழிப்பு குற்றவாளி போல் பார்ப்பார்கள். இந்த இம்சைக்கு நிக்கறது பரவால்லன்னு எழுந்து சீட்டை தியாகம் செய்ய வேண்டும். அந்த அம்மா நன்றி கூட சொல்லாமல் தூங்க ஆரம்பிக்கும்.
வண்டி கிளம்பின அரை மணி நேரத்திலிருந்து சாப்பிட ஏதாவது வந்து கொண்டே இருக்கும். சில கிரைண்டர்கள் பெங்களூரில் ஆரம்பித்தால் பெரம்பூர் வரை அரைத்துக்கொண்டே இருக்கும். சூப் வந்தால் அதற்கு மேல் எதுவும் வராது என்று அர்த்தம். சாப்பிட்ட மக்கள் கை அலம்பும் சிரமமே கிடையாது. அதான் உங்க சட்டை இருக்கே .. கறை நல்லது .. திரும்பி வரும்போது பங்காருபேட்டையில் கறிகாய் வியாபாரம் தூள் பறக்கும். உதிரிப்பூ மற்றும் நூல் வியாபாரமும் உண்டு. சில பல குடும்ப இஸ்திரிகளுக்கு நல்ல பொழுது போக்கு. கூட பயணிக்கும் கணவன்மாருக்கு சற்று நேர விடுதலை.
இதையெல்லாம் மாற்றி அமைத்தது சதாப்தி எனும் விரைவு ரெயில் சேவை. 2005ல் தொடங்கப்பட்ட மைசூர் - சென்னை மைசூர் இரயில் சேவை இது. சென்னையிலிருந்து மைசூர் வரை ரெண்டே ரெண்டு ஸ்டாப். காட்பாடி விட்டா பெங்களூர் மட்டுமே. அடிச்சு பிடிச்சு சீட் போடவேண்டாம். கால் நீட்ட இடமுண்டு. காலையில் காபி உண்டு. படிக்க செய்தித்தாள் உண்டு. காக்காய் கொத்துமளவுக்கு எதையாவது துருத்திக்கொண்டே இருப்பார்கள். ஹிந்து வேண்டாமென்றால் எக்ஸ்பிரஸ் கேட்கலாம். வேலை நிமித்தமாக பயணிப்பவர்கள் மற்றும் மேல் தட்டு வர்க்கம் மட்டுமே பயணித்தனர். மேல் தட்டு = பசை உள்ள பார்ட்டி.
சுமாராக நாலரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து சேரலாம். மசாலா தோசை ஆர்டர் செய்ய முடியாது. அவர் கொடுக்கும் ரொட்டித்துண்டும் ஜாமும்தான். குட் டே பிஸ்கெட்டெல்லாம் குடுத்த காலம் உண்டு.
இப்போதெல்லாம் வீட்டில் தவிட்டு பிஸ்கெட் என்று ஏளனம் செய்யப்பட்ட மேரி பிஸ்கெட் ரெண்டு மட்டுமே. கழுநீர் தண்ணீ போல ஒரு சூடான திரவம் கொடுக்கப்படும். அது காப்பியா டீயான்னு கண்டு பிடிப்போருக்கு நூறு பொற்காசு கொடுக்கலாம். அது டீ போட்ட பாத்திரம் கழுவிய தண்ணீர்தான் என்று என் யூகம். இதை சொன்னதற்கு அப்புறம் பார்யாள் ரயிலில் டீ குடிப்பதை நிறுத்தி விட்டாள். சகலம் க்ருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டு ஒரே மடக்கில் உள்ளே தள்ளி விட வேண்டியதுதான். வீட்டில் யாருக்கும் கரெண்ட் இல்லை போலத் தெரிகிறது. ஏறி அமர்ந்த உடன் கையிலிருக்கும் அலை பேசி முதல் லேப் டாப் வரை சார்ஜ் செய்ய வேண்டும். பிளக் பாய்ண்டுக்கு குழாயடி சண்டை. வெயில் அடிக்காமலிருக்க ஒரு ஸ்க்ரீன் இருக்கும். அதை வெறி பிடித்த மாதிரி இழுத்து வளைத்து விட்டனர்.
அப்போதெல்லாம் ஏதோ ஒரு சுமாரான டிபனோ இல்லே சாப்பாடோ போட்டுண்டிருந்தான். கழுதை தேய்ந்து கட்டெறும்பாச்சு. இப்போதெல்லாம் ஜமுக்காளம் போல சப்பாத்தி. சின்ன பிள்ளை கக்கா போனமாதிரி ஒரு "தால்". சாப்பிட்டால் வயற்று வலி கியாரண்டி !
கன்னடாவோ தமிழோ பேசாத சிப்பந்திகள். கலைஞர் இந்தி ஒழிப்பு போராட்டமெல்லாம் செய்யாதிருந்தால் நான் கூட ப்ரவீணா பாஸாகி இந்தி பண்டிட் ஆகியிருப்பேன். என் கிரகம் ! சுட்டுப்போட்டாலும் நமக்கு இந்தி நகி மாலும். ஏதோ ஒரு சைகை பாஷையில் காபி போட்ட பாத்திரம் கழுவிய தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் அந்த பழுப்பு நிற திரவம் தரப்படும்.
சாப்பாடு பற்றிய பிலாக்கணம் இத்தோடு போதும் என்று நினைக்கிறேன்.
சக பயணியர் பற்றி சில துணுக்குகள்.
ரிசெர்வ் டிக்கெட்டில்லாமல் காட்பாடியில் ஏறிய அம்மணி இப்போது பெங்களூர் ஐடி கம்பெனி மானேஜர். காசு கொழிக்குது. ஆனாலும் மூக்கை சிந்தி சீட்டில் துடைக்கும் பழக்கம் போகவில்லை. தலை சாய்க்கும் இடத்தில் ஒரே பிசுக்கு.அதே வேப்பெண்ணைதான். சாப்பிட்டதை விட கீழே கொட்டியது அதிகம். ரெண்டு கால் வானரங்கள் அதன் மீது நடந்து தரையெல்ல்லாம் பிசுபிசுப்பு. என்னதான் சதாப்தியில் போனாலும் வித்தை காட்டுறவன் முன்னாடி நின்னு கை தட்டின கும்பல்தானே நாமெல்லாம் !
ரெண்டு கால் வானரங்களை அடக்க முடியாத பெற்றோர்கள். சீட்டின் மேலே ஏறி குதிக்கின்றன. காலணியில் உள்ள கஸ்மாலமெல்லாம் சீட்டில். கண்டதை தின்று விட்டு கையை எங்கு வேண்டுமானாலும் துடைக்கின்றன. மீதமுள்ள சாப்பாட்டை கண்ட இடத்தில் சிந்தி, அதை மிதித்து, பின்னர் சீட்டில் ஏறி நின்று .. ஒரே கிஷ்கிந்தா காண்டம்தான். உங்க அப்பன் மாதிரி இல்லேடா எங்கப்பன். கழுத்து மேலே கால் வைத்து மிதித்திருப்பார், இந்த மாதிரி குதித்திருந்தால். இந்த நண்டு சிண்டுகள்தான் செஅட் மேலே இருக்கிறதென்று பார்த்தால் சில அம்மாக்களும் மேலே ஏறி மூட்டை முடிச்சு அடிக்கின்றனர் அல்லது நகர்த்துகின்றனர்.
சௌசாலையா போகலாம் என்றால் பயமாக இருக்கிறது. டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்ற உரிமையில் அங்கே உள்ள துடைக்கும் பேப்பர் அபேஸ். Manual Scavenging ஒழிக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட கழிப்பறைகள் அடைத்துக்கொண்டு நாறுகின்றன. அதில் இதைத்தான் போடுவது என்ற வகை தொகையில்லாமல் போட்டதால் வினை. ஒரு மிகப் பெரிய மாற்றமென்றால், ஆட்டின் போட்டு அதில் அம்பு விட்டு ஆணியால் பொறிக்கப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசங்களைக் காணோம்.
ஒரு மாதிரியாக ஊர் வந்து சேரும் போது வேறு களேபரம். கண்டோன்மெண்ட் மட்டுமே நிறுத்துவான். ஆனால் Whitefield வரும்போதே மக்கள் மூட்டைகளை இறக்கி வழியை அடைத்து எவனும் இறங்காத மாதிரி செய்து விடுகின்றனர். குட்டிக்கரணம் போட்டு இறங்கினால் வெளியே ஆட்டோகாரனிடம் மல்லுக்கு நிற்க வேண்டும். அல்சூர் பக்கம் என்று ஊபர் போட்டால் அந்த இழவு, மில்லர்ஸ் ரோடு பக்கம் போய் நிற்கிறது.
இனிமேல் இந்த வம்பே வேண்டாம் .. மெயில்தான் நமக்கு சரி !

0 Comments:

Post a Comment

<< Home