Comic fan

Sunday, April 05, 2026

Chinnanchiru vayadhil

பெரிய வசதிகள் ஏதுமில்லாமலே சுகமான பால்யம். நாங்கள் 14 பேரப்பிள்ளைகள். தாத்தாவின் வீடு ஒரு குக்கிராமம். பேருந்தில் வந்து இறங்கினால் ஒரு கிமீ நடந்து சென்றால்தான் வீடு வரும். தொல்லைபேசி இல்லாததால் தபால்காரர்தான் எங்கள் வருகையை அறிவிப்பார். புகைவண்டியில் வந்தால் இரண்டு கிமீ. 


அத்தைகள் வரும்போது இரயில் நிலையத்திற்கு கட்டை வண்டி செல்லும். வைக்கோல் பரப்பி அதன்மேல் தார்ப்பாய் போர்த்தியிருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறை முடிந்தவரை அனைவரும் சேர்ந்திருப்போம். குழல் விளக்கு சில நேரங்களில் கண்ணடிக்கும். குண்டு பல்புதான் பெரும்பாலும். கரெண்ட் போனால் கும்மிருட்டு. சீமெண்ணை புட்டி விளக்கு அல்லது லாந்தர். ஒவ்வொரு குடும்பமாக வந்து சேரும். முதல் இரண்டு நாட்கள் சண்டை. பிறகு சமாதானம். ஊர் கிளம்பும் பொது அழுகை.  

எல்லாரும் வந்து சேர்ந்தவுடன் தாத்தா ஒவ்வொருவரையும் கேட்பார் "என்ன பிடிக்கும்" என்று. விடுமுறை முடிவதற்குள் ஏதாவது ஒரு வேளைக்கு கேட்டது கிடைக்கும். ஏற்பாடு செய்வது பாட்டியின் வேலை. படுத்து உறங்குவதற்கு அத்தனை படுக்கைகளோ தலையணைகளோ கிடையாது. கிடைத்ததை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்குவோம். நானும் பெரியவனும் ரேழியில் படுப்போம். ஒரு சிக்கல் என்னவென்றால் காலை சீக்கிரம் எழவேண்டும். இல்லையென்றால் வீடு பெருக்க வரும் வேலைக்காரம்மா விளக்குமாற்றால் தட்டி எழுப்பும் வாய்ப்புண்டு. மார்கழி மாதமாக இருந்தால் வீதி பஜனை செய்யும் சிலர் "அன்பில் விளைந்த" என்று பாடி எழுப்பி விடுவர்.

கொல்லைப்பக்கம் கதவில்லாத குளியலறை. தாமிர அண்டாவில் வெந்நீர், கூரை இல்லாத கழி(குழி)ப்பறை. நானும் பெரியவனும் கடைசியில் செல்வோம். அண்டாவை இறக்கி வைத்து வெந்நீரை காலி செய்வோம். நாங்கள் முதல் காபி குடிக்கும் போது தாத்தா சிற்றுண்டி முடித்து இரண்டாவது காபி குடித்திருப்பார். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே தெருவை வேடிக்கை பார்ப்பது வழக்கம். 16 ஏக்கர் நிலம், 3 கிணறுகள். பம்பு செட்டு போட்டு தண்ணீர் விடும்போது தொட்டியில் குளிக்க ஏதுவாக துண்டை மறைத்து எடுத்து செல்வோம் (நானும் பெரியவனும்). அங்கே தொட்டியில் எருமை மாதிரி சில மணிகள் கிடப்போம். துவட்டிக்கொண்டு துண்டை காயவைத்து பின்னர் நல்ல பிள்ளைகளாக வீடு திரும்புவோம். கிணற்றையொட்டி இருந்த மாமரத்தின் காய்கள் புளிக்கும். உச்சி மண்டியில் நட்டுக்கொண்டு நிற்கும்.


சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அப்படியே இரயில் நிலையத்திற்கு போய் அங்கே ஏதாவது சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவோம். கிராமத்தில் உள்ள கடையில் போண்டா பஜ்ஜி என்று எதையாவது தின்று விட்டு கையில் உள்ள வெங்காய வாடையை பாட்டிக்கு காட்டுவோம். திட்டு விழும். சாயங்காலம் ஏதாவது நொறுக்கு தீனி, அரச மரத்தடி வரை விஜயம். இருட்டும்போது வீடு திரும்புவோம். இத்தனை பேருக்கு தட்டு கழுவுவதோ அல்லது இலை எடுப்பதில் உள்ள சிரமத்தால் கலந்த சாப்பாடு உருண்டைகளாக்கி கையில் போடுவார் பெரிய அத்தை. வட்டமாக முற்றத்தில் உட்கார்ந்திருப்போம். சின்ன மாமாவும் கூட உட்காருவார்.

கரகாட்டக்காரன் வந்த புதிது. சைக்கிளில் கும்பலாக போனோம். சேர் டிக்கெட் வாங்கிக்கொண்டு தரையில் உட்கார்ந்து படம் பார்த்தோம். இன்னொரு விடுமுறையின் போது "வெற்றி விழா" பார்த்தோம். 

டிவி போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாததால் யாராவது கதை சொன்னால் உண்டு. தாத்தாவின் உடல் நிலை மோசமானபோது நானும் பெரியவனும் மாறி மாறி வருவோம் கையில் செய்தித்தாளொடு. அதை தாத்தா படிக்கும் நேரம் அவரது படுக்கையை தட்டிப்போட்டு விரிப்பை மாற்றியிருப்பார்கள். ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று அவர் இறைவனடி சேர்ந்தார். பேரப்பிள்ளைகள் அனைவரும் சேர்ந்தோம். கல்யாண வீடு போல ஜன சந்தடி. எல்லாம் ஓய்ந்து அவரவர் ஊர் பொய் சேர்ந்தோம், சரியாக 24ம் நாள் பாட்டி ... ஊரே விக்கித்து போனது, இருவரும் சரியாக பேசிக்கொண்டது கூட இல்லை. ஊரையும் தாத்தாவையும் விட்டு பாட்டி எங்கும் போனதாக நினைவில்லை. அன்யோன்யம் பல நேரங்களில் வெளிப்படையாக தெரிவதில்லை.                  

தாத்தா பாட்டி இருந்தபோது சின்ன அத்தைக்கு கல்யாணமும் தலை தீபாவளியும் அந்த வீட்டில்தான். கல்யாணத்தின்போதா அல்லது தீபாவளியின் போதா நினைவில்லை பெரியவனும் சின்ன மாமாவின் தம்பியும் சில மணி நேரம் காணாமல் போனார்கள். அருகில் உள்ள ஏரிக்கரையில் சுற்றிக்கொண்டிருந்ததாக ஒற்றர்கள் தகவல். பெரிய அத்தையும் சின்ன மாமாவும் அடி பட்டையை கிளப்பி விட்டார்கள் தாம்புக்கயிற்றால். பெரியவனுக்கு அடி வாங்கியதெல்லாம் பெரிதாக படவில்லை. சின்ன மாமாவிடம் "என்னை அடிக்கும் உரிமை என் அம்மாவிற்கு உண்டு, நீ யார் என்னை அடிப்பதற்கு" என்று. தாத்தா பாட்டி  போன பின் எனக்கும் தம்பிக்கும் பூணல் போட்டதும் அதே வீட்டில்தான். 

அதற்கப்புறம் விருமாண்டி கதை போல பல திருப்பங்கள். 

எல்லாம் போன பிறகு எஞ்சி இருப்பது நினைவுகளும் இந்த போட்டோவும் மட்டுமே ..