Comic fan

Monday, December 29, 2025

Aruvi - Review

 பார்த்ததில் வலித்தது "அருவி"

வித்யாசமான படம் என்ற அறிமுகத்துடன் படம் பார்க்க சென்றோம். குழப்பமான ஆரம்பம். போலீஸ் .. கெடுபிடி .. மழை .. விசாரணை .. ஹிந்தி பேசும் மேலதிகாரி என்று சில நிமிடங்கள் களேபரம்..
ஒரு சிறுமி, அழகான குடும்பம், நாறுது என்று சொன்னவுடன் புகை பிடிப்பதை நிறுத்திய அப்பா, அக்காவின் பிறந்த நாளுக்கு சிறு பரிசு வாங்கி வரும் தம்பி, அனைவரையும் அரவணைத்து வரும் அம்மா என்று ஆரவாரமில்லாமில் அமைதியாக துவங்கியது படம்.
எந்த பாவமும் செய்யாத அப்பாவிக்கு எய்ட்ஸ் எனும் சாபம். குடும்பத்தில் அருவருப்பு. மீண்டும் புகை பிடிக்கும் அப்பா. மிரண்டு போன அம்மா. வெறுப்பை வீசும் தம்பி என்று எல்லாமே மாறிப் போவது வியப்பல்லவே.
அந்தரங்கத்தை பகிரங்கமாக்கி பிணம் தின்னும் "சொல்வதெல்லாம் உண்மை" எனும் கேடு கேட்ட நிகழ்ச்சியை முன்பே ஊர்வசி "பேசுவதெல்லாம் உண்மை" என்று கிண்டலடித்திருந்தாலும் இந்த படத்தில் வச்சி செஞ்சிருக்காங்க .. அடுத்தவரின் அவலத்தை அம்பலமாக்கி அதில் சோறு தின்பதற்கு பதிலாக லட்சுமி ராமகிருஷ்ணன் நாண்டு கொண்டு சாகலாம். எது எப்படி இருந்தால் நமக்கென்ன TRP ரேட்டிங்தான் முக்கியம் என்று அலையும் தொலைக்காட்சி சானெல்களுக்கு செருப்படி. திருந்துவோமா நாம்.
பலவீனமான தருணங்களில் அடுத்தவரை மேயும் சமூகத்திற்கு உதாரணமாக மூன்று நபர்கள் தோழியின் அப்பா (மனைவியை இழந்தவர்), ஆன்மிகம் எனும் போர்வை போர்த்திய ருத்திராட்சப் பூனை, எல்லா விதமான அல்லல்களுக்கும் பெயர் போன கார்மெண்ட் தொழிற்சாலை மேலாளர், இவர்களை வைத்து நிகழ்ச்சியை ஈடேற்றலாம் என்று ஆரம்பிக்கும் துணை இயக்குனர், முடிந்தால் இந்த அபலையை கபளீகரம் செய்யலாம் என்று திட்டமிடும் இயக்குனர், தொகுப்பாளினியாக லட்சுமி கோபாலகிருஷ்ணன் என்று தேர்ந்தேடுத்து கோர்த்திருக்கும் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு ஒரு ஷொட்டு. அபார தைரியம் அதிதி பாலனுக்கு.
அருவிக்கு எய்ட்ஸ் என்று தெரிந்தவுடன் முகம் சுளிக்கும் தொகுப்பாளினி, அருவெறுப்பில் நெளியும் மூவர், சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி டென்ஷன் ஏற்றும் நிகழ்ச்சி இயக்குனர் என்று சக்கைப் போடு போட்டிருக்கிறார்கள். தனக்கு எய்ட்ஸ் இல்லை என்று தெரிந்தவுடன் அருவியின் மீது மேலாளர் பாயும் வரை சும்மா இருந்த அருவி சீறிப் பாய்கிறது. நிகழ்ச்சி இயக்குனரை சுட்டது தப்பேயில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒரு task என்று roulette மூலம் அமைத்துக் கொடுக்கும் போது மேலாளருக்கு உள்ள மெல்லிய மனது, கிழவியின் மரணத்தை விவரிக்கும் தருணத்தில் பட்டினத்தார் பாடல் என்று நல்ல தேர்வு. மீண்டும் கோமதி கோபாலக்ரிஷ்ணனை நினைவூட்டும் நகைச்சுவைக் காட்சி "சொல்வதெல்லாம் உண்மைக்கு" சாட்டையடி.
சந்தில் சிந்து பாடி ஒரு பாட்டில் பீர் சொல்லும் சுபாஷ் யதார்த்தம்.
எல்லாம் முடிந்து சரணடையும் அருவியிடம் தன வீர தீர பிரதாபத்தை காட்டுவதாக அமையாமல் "Dont Quit" என்று வாழ்த்து அட்டை அனுப்பும் போலீஸ் அதிகாரி மனதில் நிற்பார். நோயுண்ட அனைவரும் படும் பாட்டை காட்டி மனதை நெருடியிருக்கிறார்கள். அப்பா, அம்மா, தம்பி என்று சம்பந்தப் பட்ட அனைவரும் அருவியைக் காணச் செல்வது வெகு பொருத்தம்.
என்ன செய்து என்ன பயன் .. திரை அரங்கை விட்டுவெளியே வரும்போது, "பேசாமல் வேலைக்காரன் பார்த்திருக்கலாம்" என்று அங்கலாய்த்த பொது ஜனம்..

Sunday, December 28, 2025

Water !

 900 வருடங்களில் இண்டஸ் நாகரிகம் அழிந்து போனதாக பேப்பர்ல போட்டிருந்தாங்க .. எரிஞ்சு போச்சு ...

நாகரிகம் முத்திப் போயிதான் எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு சொன்னா, நம்மள கேனப் பயன்னு சொல்ராங்க. கிணத்துல சேந்தி குளிச்ச காலத்துலே தண்ணிக்கு மரியாதை இருந்துச்சு. எப்போ குழாயில் தண்ணி வந்ததோ அப்பவே ஆரம்பிச்சுது கேடு காலம். நாகரிகம் முத்திப்போயி ஷவரும் பாத் டப்பும் வந்ததுக்கு அப்புறம் சொல்லவே வேண்டாம். தண்ணீர் தண்ணீர் படத்துல வந்த வசனம்தான் நினைவுக்கு வருது... கிணறு இருந்த வீட்டில எல்லாம் இப்போ எண்ணை வர்ற ஆழத்துக்கு போர். உனக்கு எனக்குன்னு போட்டி போட்டு ஆழ்துளை கிணறுகள். Fossil water எனப்படுவது தொடவே கூடாதும்பாங்க. அதுக்கும் கீழே போயாச்சு.
குத்த வச்சு கக்கா போயிட்டு அலம்பினமா போனோமான்னு இருந்த நம்மள கெடுத்தது வெஸ்டர்ன் கமோடு. இப்போ நாட்டுல பாதி பேருக்கு "உக்காரவே" முடியாத சூழ்நிலை. அரை பக்கெட் தண்ணியில போனதை இப்போ 20 லிட்டர் தண்ணி கொட்டி போக வச்சுக்கிட்டு இருக்கோம். இதுல தொடைக்க பேப்பர் வேற. இப்போ ஜப்பான்காரன் கண்டுபிடிச்சான் ஜாக்கி சான் கண்டுபிடிச்சான்னு சொல்லி Squatty Pottyன்னு புது கலவரம். தாய்மார்கள் காலில உக்கார வச்சு குழந்தைய பழக்கின காலம் போயி இப்போ Pampers போட்டு மூட்டை கட்டுறாங்க. குழந்தைங்க போச்சா போகலியான்னு கூட தெரியாம அப்படியே மூட்டையோட சுத்திகிட்டு கிடக்குதுங்க. நேரத்துல எழுந்திருக்கிற குழந்தையை தன்னோட கையலாகத்தனத்துக்கு ஏதுவா தூங்க வைக்கிறாங்க. அப்புறம் எங்கே காலைக் கடன் ? சரி அந்த மூட்டையாவது ஒழுங்கா dispose செய்யறாங்களான்னா, அதுவும் கிடையாது. குப்பைத்தொட்டியில் போட்டு கார்பொரேஷன் தலையில காட்டுறாங்க. Manual Scavenging ஒழிச்சாச்சு மார் தட்டுனதுதான் மிச்சம். குப்பைத்தொட்டி பக்கம் போகமுடியல.
சில புத்திசாலிங்க வீட்டுல இருக்கற வெஸ்டர்ன் கமோடுலயே மூட்டைய dispose செஞ்சதுல அடைப்பு முட்டுனதுதான் மிச்சம். நவநாகரீகம் அப்படின்னு சொல்லி சானிட்டரி நாப்கின் மற்றும் tampon. அதையும் தூக்கி இதுலயே போட, போயிட்டிருந்ததும் போகாம மிதக்குது. இல்லையா கீழ் வீட்டுக்காரன் தலை விதி. இந்த ரெண்டு நவ நாகரீக சாதனத்துலயும் gel இருக்கு. தண்ணீரை உறிஞ்சிகிட்டு உப்பிகிட்டே போகும்.வேற என்ன சொல்ல....
வீட்டின் கொல்லைப்பக்கம் பாத்திரம் துலக்க சாம்பலும் புளியும் போட்டது அந்தக்காலம். பாத்திரம் விளக்கின தண்ணீயிலே முளைச்சது தக்காளி செடியும் மிளகாய் செடியும். இப்போ என்னடான்னா விம்முங்கிறாங்க ப்ரில்லுங்கிறாங்க அசல் எலுமிச்சைங்கிறாங்க. சபீனாவுல ஆரம்பிச்சது இந்த வில்லங்கம். பாத்திரம் விளக்கின கைல சிரங்கு வராமல் இருந்தா எங்கப்பன் செஞ்ச புண்ணியம். வீட்டுக்காரம்மா தொலைக்காட்சியிலே சீரியல் பார்க்கும்போது வேலைக்காரம்மா குழாயை தெறந்து விட்டா தண்ணி எங்க மிஞ்சும்.
எல்லாம் போகட்டும் கழிவு நீர் சுத்திகரிப்பாவது உண்டான்னு பார்த்தா அதுவும் இல்லை. எத்தனை நாளுக்கு வரும் இந்த தண்ணீ.
அம்மா ஆட்சியில மழை நீர் சேகரிப்புன்னு போட்டதுனால ஏதோ பரவால்ல. இல்லேன்னா அதும் கழிவு நீரோட போயி சேர்ந்திருக்கும். ஆத்துலே போற தண்ணீய கோலா கம்பெனிக்காரனுக்கு வித்துட்டு வெக்கமே இல்லாம அவன் கம்பெனி சரக்க வாங்கி மிக்ஸிங்ல ஊத்தி குடிக்கற முட்டாள் கும்பல்தானே நம்மல்லாம். இதுல அந்த கம்பெனிக்கு விளம்பரத்தில நடிச்சவரே இந்த பிரச்சினை பற்றிய படத்திலயும் நடிப்பாரு. ஐய் படம் நல்லாருக்குன்னு ப்ளாக்லே டிக்கெட் வாங்கிப் பார்த்துட்டு கை தட்டி பிகில் அடிக்கற அதி புத்திசாலிங்க நம்மதேன். நம்ம ஊருக்கு வர்ற கம்பெனி பூரா மறை நீர் உறிஞ்சறதுதான். . சாயப் பட்டறை, தோல் பதனிடுவதுன்னு வரிசையா...
இதுக்கப்பறம் 900 வருஷம் எதுக்கு? 90 வருஷம் போதும். நம்ம போய் சேர்ந்துடுவோம் .. அடுத்த சந்ததிக்கு கம்ப்யூட்டர்காரன் தண்ணீ ஊத்துவான் .. நமக்கெதுக்கு பொல்லாப்பு ..காலா படம் பார்த்துட்டு காலால மிதி படுவோம்.

Shatabdi

 அதோ கதி with சதாப்தி !

அப்போதெல்லாம் ப்ருந்தாவன், லால்பாக், மெயில் போன்ற சில இரயில்களே புழக்கத்தில் இருந்தன. என்னை மாதிரி அக்கா வீட்டிற்கும் கட்டை புளிய மரத்திற்கும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு பஸ் ஒரு தலைவலி. அரசுப் பேருந்து ஒரு விதமான தலை வலி என்றல் தனியார் பேருந்துகள் இன்னொரு மாதிரி திருகுவலி. முதலிரண்டு ரயில்களில் பயணிப்பது ஒரு விதமான சொல்ல முடியாத வேதனை. எதிரெதிர் இருக்கைகள், கால் நீட்டி அமர முடியாதவாறு வடிவமைக்கப்பட்டிருந்தன. முன் பதிவு செய்திருந்தாலும், மற்ற பயணிகளின் ஆதிக்கம் மற்றும் மிரட்டல் அதிகம். "நீ ரிசெர்வ் பண்ணிட்டு வந்துட்டா, பெரிய பருப்பா ?" என்று ஆரம்பிக்கும். மூச்சா போக வழி இல்லாமல் அங்கிங்கினாதபடி எங்கும் கூட்டம். வழி விடுறீங்களா? இல்லே இங்கேயே போகவா? என்று மிரட்டினால் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கும். ஜன்னலோரம் சீட் கிடைத்தால் தப்பித்தோம். மத்தியில் மாட்டிக்கொண்டால் வைத்து நசுக்கி விடுவார்கள். கடைசி சீட் வாய்த்தால் (aisle seat) நிற்பவர்கள் பிருஷ்ட பாகத்தை தோளில் வைத்து தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். #metoo அங்கே செல்லாது ..
நம்ம ஊர் பயணிகளுக்கு மூட்டை கட்டுவதென்றால் மகா பிரியம். வீடு மாற்றும் கணக்குக்கு லக்கேஜ் இருக்கும். "ஏம்ப்பா, சித்தே காலை நகத்து" அப்படின்னு சொல்லிட்டு சொருகிடுவாங்க. அப்படியே இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு உக்காந்தா யாராவது கைக்குழந்தையுடன் காட்பாடியில் ஏறுவார்கள். ரிசெர்வ் செய்திருக்கும் நம்மை ஏதோ கற்பழிப்பு குற்றவாளி போல் பார்ப்பார்கள். இந்த இம்சைக்கு நிக்கறது பரவால்லன்னு எழுந்து சீட்டை தியாகம் செய்ய வேண்டும். அந்த அம்மா நன்றி கூட சொல்லாமல் தூங்க ஆரம்பிக்கும்.
வண்டி கிளம்பின அரை மணி நேரத்திலிருந்து சாப்பிட ஏதாவது வந்து கொண்டே இருக்கும். சில கிரைண்டர்கள் பெங்களூரில் ஆரம்பித்தால் பெரம்பூர் வரை அரைத்துக்கொண்டே இருக்கும். சூப் வந்தால் அதற்கு மேல் எதுவும் வராது என்று அர்த்தம். சாப்பிட்ட மக்கள் கை அலம்பும் சிரமமே கிடையாது. அதான் உங்க சட்டை இருக்கே .. கறை நல்லது .. திரும்பி வரும்போது பங்காருபேட்டையில் கறிகாய் வியாபாரம் தூள் பறக்கும். உதிரிப்பூ மற்றும் நூல் வியாபாரமும் உண்டு. சில பல குடும்ப இஸ்திரிகளுக்கு நல்ல பொழுது போக்கு. கூட பயணிக்கும் கணவன்மாருக்கு சற்று நேர விடுதலை.
இதையெல்லாம் மாற்றி அமைத்தது சதாப்தி எனும் விரைவு ரெயில் சேவை. 2005ல் தொடங்கப்பட்ட மைசூர் - சென்னை மைசூர் இரயில் சேவை இது. சென்னையிலிருந்து மைசூர் வரை ரெண்டே ரெண்டு ஸ்டாப். காட்பாடி விட்டா பெங்களூர் மட்டுமே. அடிச்சு பிடிச்சு சீட் போடவேண்டாம். கால் நீட்ட இடமுண்டு. காலையில் காபி உண்டு. படிக்க செய்தித்தாள் உண்டு. காக்காய் கொத்துமளவுக்கு எதையாவது துருத்திக்கொண்டே இருப்பார்கள். ஹிந்து வேண்டாமென்றால் எக்ஸ்பிரஸ் கேட்கலாம். வேலை நிமித்தமாக பயணிப்பவர்கள் மற்றும் மேல் தட்டு வர்க்கம் மட்டுமே பயணித்தனர். மேல் தட்டு = பசை உள்ள பார்ட்டி.
சுமாராக நாலரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து சேரலாம். மசாலா தோசை ஆர்டர் செய்ய முடியாது. அவர் கொடுக்கும் ரொட்டித்துண்டும் ஜாமும்தான். குட் டே பிஸ்கெட்டெல்லாம் குடுத்த காலம் உண்டு.
இப்போதெல்லாம் வீட்டில் தவிட்டு பிஸ்கெட் என்று ஏளனம் செய்யப்பட்ட மேரி பிஸ்கெட் ரெண்டு மட்டுமே. கழுநீர் தண்ணீ போல ஒரு சூடான திரவம் கொடுக்கப்படும். அது காப்பியா டீயான்னு கண்டு பிடிப்போருக்கு நூறு பொற்காசு கொடுக்கலாம். அது டீ போட்ட பாத்திரம் கழுவிய தண்ணீர்தான் என்று என் யூகம். இதை சொன்னதற்கு அப்புறம் பார்யாள் ரயிலில் டீ குடிப்பதை நிறுத்தி விட்டாள். சகலம் க்ருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டு ஒரே மடக்கில் உள்ளே தள்ளி விட வேண்டியதுதான். வீட்டில் யாருக்கும் கரெண்ட் இல்லை போலத் தெரிகிறது. ஏறி அமர்ந்த உடன் கையிலிருக்கும் அலை பேசி முதல் லேப் டாப் வரை சார்ஜ் செய்ய வேண்டும். பிளக் பாய்ண்டுக்கு குழாயடி சண்டை. வெயில் அடிக்காமலிருக்க ஒரு ஸ்க்ரீன் இருக்கும். அதை வெறி பிடித்த மாதிரி இழுத்து வளைத்து விட்டனர்.
அப்போதெல்லாம் ஏதோ ஒரு சுமாரான டிபனோ இல்லே சாப்பாடோ போட்டுண்டிருந்தான். கழுதை தேய்ந்து கட்டெறும்பாச்சு. இப்போதெல்லாம் ஜமுக்காளம் போல சப்பாத்தி. சின்ன பிள்ளை கக்கா போனமாதிரி ஒரு "தால்". சாப்பிட்டால் வயற்று வலி கியாரண்டி !
கன்னடாவோ தமிழோ பேசாத சிப்பந்திகள். கலைஞர் இந்தி ஒழிப்பு போராட்டமெல்லாம் செய்யாதிருந்தால் நான் கூட ப்ரவீணா பாஸாகி இந்தி பண்டிட் ஆகியிருப்பேன். என் கிரகம் ! சுட்டுப்போட்டாலும் நமக்கு இந்தி நகி மாலும். ஏதோ ஒரு சைகை பாஷையில் காபி போட்ட பாத்திரம் கழுவிய தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் அந்த பழுப்பு நிற திரவம் தரப்படும்.
சாப்பாடு பற்றிய பிலாக்கணம் இத்தோடு போதும் என்று நினைக்கிறேன்.
சக பயணியர் பற்றி சில துணுக்குகள்.
ரிசெர்வ் டிக்கெட்டில்லாமல் காட்பாடியில் ஏறிய அம்மணி இப்போது பெங்களூர் ஐடி கம்பெனி மானேஜர். காசு கொழிக்குது. ஆனாலும் மூக்கை சிந்தி சீட்டில் துடைக்கும் பழக்கம் போகவில்லை. தலை சாய்க்கும் இடத்தில் ஒரே பிசுக்கு.அதே வேப்பெண்ணைதான். சாப்பிட்டதை விட கீழே கொட்டியது அதிகம். ரெண்டு கால் வானரங்கள் அதன் மீது நடந்து தரையெல்ல்லாம் பிசுபிசுப்பு. என்னதான் சதாப்தியில் போனாலும் வித்தை காட்டுறவன் முன்னாடி நின்னு கை தட்டின கும்பல்தானே நாமெல்லாம் !
ரெண்டு கால் வானரங்களை அடக்க முடியாத பெற்றோர்கள். சீட்டின் மேலே ஏறி குதிக்கின்றன. காலணியில் உள்ள கஸ்மாலமெல்லாம் சீட்டில். கண்டதை தின்று விட்டு கையை எங்கு வேண்டுமானாலும் துடைக்கின்றன. மீதமுள்ள சாப்பாட்டை கண்ட இடத்தில் சிந்தி, அதை மிதித்து, பின்னர் சீட்டில் ஏறி நின்று .. ஒரே கிஷ்கிந்தா காண்டம்தான். உங்க அப்பன் மாதிரி இல்லேடா எங்கப்பன். கழுத்து மேலே கால் வைத்து மிதித்திருப்பார், இந்த மாதிரி குதித்திருந்தால். இந்த நண்டு சிண்டுகள்தான் செஅட் மேலே இருக்கிறதென்று பார்த்தால் சில அம்மாக்களும் மேலே ஏறி மூட்டை முடிச்சு அடிக்கின்றனர் அல்லது நகர்த்துகின்றனர்.
சௌசாலையா போகலாம் என்றால் பயமாக இருக்கிறது. டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்ற உரிமையில் அங்கே உள்ள துடைக்கும் பேப்பர் அபேஸ். Manual Scavenging ஒழிக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட கழிப்பறைகள் அடைத்துக்கொண்டு நாறுகின்றன. அதில் இதைத்தான் போடுவது என்ற வகை தொகையில்லாமல் போட்டதால் வினை. ஒரு மிகப் பெரிய மாற்றமென்றால், ஆட்டின் போட்டு அதில் அம்பு விட்டு ஆணியால் பொறிக்கப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசங்களைக் காணோம்.
ஒரு மாதிரியாக ஊர் வந்து சேரும் போது வேறு களேபரம். கண்டோன்மெண்ட் மட்டுமே நிறுத்துவான். ஆனால் Whitefield வரும்போதே மக்கள் மூட்டைகளை இறக்கி வழியை அடைத்து எவனும் இறங்காத மாதிரி செய்து விடுகின்றனர். குட்டிக்கரணம் போட்டு இறங்கினால் வெளியே ஆட்டோகாரனிடம் மல்லுக்கு நிற்க வேண்டும். அல்சூர் பக்கம் என்று ஊபர் போட்டால் அந்த இழவு, மில்லர்ஸ் ரோடு பக்கம் போய் நிற்கிறது.
இனிமேல் இந்த வம்பே வேண்டாம் .. மெயில்தான் நமக்கு சரி !

Thursday, December 25, 2025

Gas !

 ர் விடுதல் ...

எச்சரிக்கை :
1. ஐய்யே என்று முகம் சுளிப்பவர்கள் தாண்டிச் செல்லவும்.
2. தனியாக சிரித்து மாட்டிக்கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல ...
எந்த விஷயத்துக்கும் ஒரு இன்ஸ்பிரஷன் தேவை என்பர். நமக்கு இன்ஸ்பிரஷன் இந்த பதிவுக்கு இலவச இணைப்பு.
இந்தியன் படத்தில் செந்தில் கவுண்டமணி காமெடியை ரசிக்காதவர் உண்டோ. கூடவே கிரேஸி மோகன் வசனம் வேறு. அதென்னவோ காதல் இளவரசனுக்கும் மேற்கண்டவருக்கும் நல்ல ராசி. படத்தில் செந்திலின் பெயர் பன்னீர்செல்வம். கவுண்டர் ஒரு சந்தர்ப்பத்தில் அவரை பன்னீசெல்வம் என்று விளிக்க, செந்தில், "ர்" விட்டுப்போச்சு என்று சுட்டிக்காட்டும் போது கவுண்டர் திரும்பிப்பார்த்து, "நான் ர் விடலையே" என்பார்.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் சற்று முகம் சுளிக்கும்படி மூத்த நடிகர் V S ராகவன் டேஷ் போடுவதைப் பற்றி பேசுவார். இன்னும் சற்று முகம் சுளிக்க நம் சந்தானம் கூட இருப்பவர் வாத்து பிரியாணி சாப்பிட்டதை கண்டு பிடித்தது. ஆனால் சிரிப்பு மூட்டியது பிதாமகனில் சூர்யாவின் சூரண வியாபாரம். அதே படத்தில் சூர்யா சொல்வார், "கொலை செய்ததை கூட ஒத்துக்குவாங்க, ஆனால் டேஷ் போட்டதை ஒத்துக்க மாட்டாங்க" என்று.
சற்று இதைப்பற்றி ஆராயலாம் என்று தோண்டினால் கீழ்கண்ட ஸ்லோகம் அகப்பட்டது :
உத்தமம் டர்ர புர்ராஞ்ச
மத்தியமம் கொய்ய பிய்யாஞ்ச
டுஸ்ஸாக மகா கோரம்
நிசப்த்தம் பிராண சங்கடம்
அனுபவித்தவர்களுக்கு பிராண சங்கடத்தின் மகிமை தெரியும். ஆராய்ச்சியை பற்றிய விபரங்கள் தேவைப்படுபவர்கள் தனியே சந்திக்கவும் ....







Tuesday, December 23, 2025

பச்சிலைப் படலம் ...

தொழில் நுட்ப கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் (83 or 84). கிறிஸ்துமஸ் வர ஒரு வாரம் இருக்கும்போதே விழா எடுத்து விடுவார்கள். அதன் பிறகு 10 நாள் விடுமுறை வரும். விழாக்கொண்டாட்டத்தில் மாணவர் அனைவரும் சேர்ந்து ஆடல், பாடல் கொண்டாட்டம்தான். புகை பிடிப்பது என்ற நல்ல பழக்கத்தை ஆரம்பித்திருந்த காலம்.
மாதத் துவக்கத்தில் வில்ஸ் பில்டர்..மாதம் தேய தேய பீடி என்பது எழுதாத விதி. ஹாஸ்டெலில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. அறிவியலில் சுமாரான மார்க் வாங்கியிருந்த நண்பர்கள் கண்டுபுடித்தது என்னவென்றால் மொட்டை மாடியில் பிடித்தால் வார்டனின் மூக்குக்கு எட்டாது என்னும் அரிய விடயம் அவர் ஒரு துப்பறியும் சாம்பு. எப்படியோ கண்டுபிடித்து விட்டார். இருட்டில் மேலே வர தயங்கி செக்யூரிட்டியை கூட வைத்துக்கொண்டு மாடி ஏறினார். சத்தம் கேட்காமலிருக்க வேண்டுமென்று காலணி கழற்றி விட்டு வெறும் காலில் நடந்து வந்தார். பின்னாலிருந்த செக்யூரிட்டி லாடம் வைத்த ஷூ போட்டுக்கொண்டு பைய படியேறினார். இது போதாதா .. மக்கள் விட்டனர் சவாரி.
30 பேர் இருந்து batchல் 19 பேர் புகை பிடிப்பவர்கள். தலையணையின் கீழ் எப்போதும் சரக்கு இருக்கும். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்கு திருட்டுத்தனமா நழுவி ஒரு வெண் சுருட்டை மூன்று பேர் பகிர்ந்தது இன்னும் மறவாத களவு. இன்று சந்தித்தாலும் அப்படியே ..
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பன் "இளைய நிலா.. பொழிகிறது" பாடினான். நண்பனுக்கு "ழ"னா வராது. சுருதியும் சேரவில்லை. முதல் வரி பாடிவிட்டு, மூத்த சகோதரியை கோபத்துடன் அழைத்தான். மைக்கில் எல்லாருக்கும் கேட்டது. சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. அடுத்த குரூப் புதிய ராமாயணம் படைத்தார்கள்.
சந்தேகத்திற்குறிய முறையில் சில நண்பர்கள் நழுவினர் மொட்டை மாடியை நோக்கி.. மேலே சென்று பார்த்தால் தனியாக ஒரு கும்பல் எதையோ உள்ளங்கையில் வைத்து கசக்கி ஆராய்ந்து கொண்டிருந்தனர். பிறகு அந்த கலவையை வெண் சுருட்டுக்குள் அடைத்து பற்ற வைத்தனர். வித்யாசமான நெடி. என்னடா இது என்று கேட்டால், கன்னடத்தில் "சொப்பு" என்றான். என்ன இலையாக இருக்கும் என்று வியந்து கொண்டிருந்த போது, "பேக்கா" என்றான். வந்தது வந்தாச்சு, என்னதான் நடக்குதென்று பார்ப்பதற்காக கையில் வாங்கிக்கொண்டேன்.
புகையை நெஞ்சார இழுத்தேன். மூன்றாவது முறை நெஞ்சில் கழுதை உதைத்தது போலிருந்தது. கண்ணைக் கட்டியது. தலை சுற்ற ஆரம்பித்தது. மெதுவாக படியிறங்கி ரூமிற்கு போய் விடலாம் என்று எட்டிப் பார்த்தால் அதல பாதாளமாய் தெரிந்தது படிக்கட்டு. கைப்பிடியை இறுக்கமாக பிடித்து கொண்டு படியிறங்க ஆரம்பித்தேன். படிகள் நீண்டுகொண்டே போயின. பல மணி நேரம் போன மாதிரி இருந்தது. ரூம் வந்து சேர்ந்தது. செய்யக்கூடாத ஒன்றை செய்தேன். தலை சாய்த்தேன். ப்ரம்மஹத்திகள் முதலிலேயே சொல்லியிருக்கலாம் படுக்காதே என்று. Infinity radius கொண்ட ராட்சத ராட்டினம் சுற்றியது. குடல் வாய்க்கு வந்தது.
கண் திறந்து பார்த்தால் இரண்டு ப்ரம்மஹத்திகள் moon விளையாடிக்கொண்டிருந்தன. அது என்ன விளையாட்டு என்று பிறகு சொல்கிறேன். முகம் அலம்பினால் தெளியுமோ என்று எண்ணி தட்டு தடுமாறி wash basinல் உள்ள கண்ணாடியில் பார்த்தால் கண்ணைக் காணோம். எப்படியோ மறுபடியும் படுக்கைக்கு வந்து வண்டி மலையேறியது. அடுத்த நாள் விழிப்பு வந்த போது காட்பாடி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன் சித்தூர் செல்லும் பஸ் பிடிக்க. "நடுவுல ஒரு பக்கத்தை காணோம்"
விடுமுறை முடிந்து திரும்பி வந்து அந்த நண்பனிடம் விளக்கம் கேட்ட போது சிரித்தான். அது ஒரு amplifier. எந்த உணர்வையும் பல மடங்காக்கும். பயமும் இதில் சேர்த்தி. செய் முறை விளக்கத்துடன் அடுத்த trial அரங்கேறியது. லாகிரி வஸ்துவின் வீரியம் விளங்கியது.
பல வருடங்கள் கழித்து இந்த வீர தீர பிரதாபத்தை பற்றி பீற்றிக் கொண்டிருந்த போது ஒரு ஞானி மண்டையில் கொட்டி அது அப்படியல்ல என்று மாற்று செயல் முறை கூறினார். ஆட்டுப்பாலில் பச்சிலையை ஊற வைத்து, வெந்நீர் காய வைக்கும் அடுப்பின் புகை போக்கியில் மூங்கில் குழையில் அடைத்து வைக்க வேண்டும், சில நாட்கள் கழித்தெடுத்து, இளநீரில் மூன்று துளையிட்டு, நாணலில் பச்சிலையை பக்குவமாக அடைத்து, organic ஹூக்கா போல உபயோகிக்க வேண்டுமென்றார். வெண்ணையை உருக்கி புகையாக்கி உறிஞ்சுவது போலிருக்கும். மேகத்தை நெஞ்சில் சேர்ந்தாற் போல இருக்கும் என்று வேறு உசுப்பேத்தி விட்டார். செய்து பார்க்க நேரம் அமையவில்லை. அன்னாரிடம் அவர் பேர் சொல்வதில்லை என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்... அன்பர் யாரென்று நீங்கள் யூகித்தால் நான் பொறுப்பல்ல.— feeling naughty.

Train Journeys

 இரயில் பயணங்களில் ..

இதன் சுகம் பயணித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தாத்தாக்கள் இரண்டு பேரும் Indian Railwaysல் வேலை பார்த்தவர்களாக இருந்ததால் வருடத்திற்கு சில முறை பாஸ் உண்டு. கூட ஒட்டிக்கொள்ளும் எனக்கு மட்டும் டிக்கெட்வாங்க வேண்டியிருந்தது. புகைவண்டியில் ஆரம்பித்தது இந்த பயணம். வேண்டுமானால் நிற்கலாம். சற்று நடக்கலாம். சுச்சா, கக்கா போகலாம் என்ற பல வசதிகள் பிரமிப்பூட்டின. கடைசி வரை சொம்பு எட்டாமல் போனது வேறு கதை.
படிக்கும் காலத்தில் concession டிக்கெட் இருந்தது. மும்பை வரை சென்று வரும் பேறு கிட்டியது. சயனித்துக்கொண்டே பயணிப்பது என்ற சுகம் ஈடேறியது, உதயான் எக்ஸ்பிரஸ் எனும் இரயிலில். கூட வந்த மார்வாடிக் குடும்பம் தங்களுக்கு மட்டுமன்றி சக பயணிகளுக்கு தின்பண்டங்கள் கொண்டு வந்திருந்தனர். முழு நாள் பயணம் அதுவே முதல் முறை. அங்கங்கே இரயில் நின்ற போது பிரட் ஆம்லெட் வாங்கி சாப்பிட்டோம். ஸ்டேஷனில் உள்ள குழாயில் நீர் அருந்தினோம். டீயும் காபியும் சில இடங்களில் கிடைத்தது. வழியில் லோனாவாலா சிக்கி எனப்படும் கடலை மிட்டாயை பை நிறைய வாங்கினோம். கீழ் பெர்த்தில் தூங்கியவர் கல்யாணில் இறங்கும் போது, அவரது மிட்டாய் பொட்டலத்தை மறந்து விட்டுப் போனார். அதை எடுத்த குற்றத்திற்கான தண்டனை பல வருடங்கள் கழித்து தூத்துக்குடியிலிருந்து வந்த போது கிடைத்தது. சந்தித்த நபர்களும், சம்பாஷணைகளும் இரயில் பயணத்தின் மீது தீராக் காதலை உருவாக்கியது.
அலுவலக வேலை நிமித்தமாக ஒரு முறை தூத்துக்குடி சென்று திரும்பும் போது மக்ரூன் பிஸ்கெட் வாங்கி வந்தேன். மற்ற கம்பார்ட்மெண்டில் பேசிக்கிக்கொள்ளும் (கொல்லும்) சக பயணிகள் ஏசி கம்பார்ட்மெண்டில் ஏறியவுடன் ஏன் முறைத்துக் கொள்கிறார்கள் என்று இன்னமும் புரியவில்லை. பக்கத்துக்கு பெர்த் மாமா அரசாங்க அலுவலர் போல தெரிந்தது. இரண்டு மூன்று பேர் மூட்டை சுமந்து வந்தனர். சலாம் போட்டு விடை பெற்றனர். அன்னார் தாம்பரத்தில் இறங்க வேண்டியிருந்தது. தடபுடலாக வண்டியேறிய சிலர் வண்டியிலிருந்து அவரையும் அவரது மூட்டை முடிச்சுகளையும் இறக்கினர், எனது மக்ரூன் பிஸ்கெட் பெட்டியையும் சேர்த்து. அவர்களது ஆர்வக்கோளாறு அல்லது விசுவாசம், எனது கவனமின்மை. எழும்பூரில் இறங்க வேண்டிய நான் மக்ரூன் பிஸ்கெட் பெட்டியை தேடினால், மும்பையில் லவட்டிய லோனாவாலா சிக்கி சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது.
இரவுப் பயணம் என்பது சில நேரங்களில் வரமாகவும், பல நேரங்களில் சாபமாகவும் அமைகிறது, சக பயணிகளை பொறுத்து. சிலருக்கு வீட்டில் கிடைக்காத பிரைவசி இரயிலில் கிடைப்பதால் இரவு பகல் பாராமல், உரக்கப் பேசி அடுத்தவர் உறக்கத்தை கெடுக்கின்றனர். சிலருக்கு விளக்கு அணைக்கக் கூடாது. மூடு வந்துவிடும் போல ! சில கொடுத்து வைத்த மகராசர்கள் ஏறினார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் (பலத்த குறட்டையுடன்). மூலாதாரத்தில் ஆரம்பித்து சஹஸ்ராரம் வரை சென்று மீண்டு வரும். இரயில் சத்தத்தையும் மீறிய அசுர சாதகம்.
சமீபத்திய பயணம் சென்னைக்கு. இரட்டை தளமுள்ள இரயிலில் பயணம். என்ன மாயமோ தெரியவில்லை எப்போதும் கீழ் தளத்திலேதான் சீட் கிடைக்கிறது. கால் நீட்ட வசதி கிடையாது. சற்றே கோணிக்கொண்டு அமர்ந்தால் ஓகே. குறைந்த அளவு லக்கேஜ் என்பது நம் மக்களுக்கு பழக்கமே இல்லை முடிந்தால் வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் இரயிலில் ஏற்ற வேண்டும். குறைந்த பட்சம் தலைக்கு 5 லக்கேஜாவது இருக்க வேண்டும் என்று சில எழுதப்படாத விதிகள். அடுத்தவனின் கால் சந்தில் இடம் இருந்தால் போதும், ஒரு மூட்டையை அங்கே இறக்க வேண்டியதுதான்.
இரயில் கிளம்பியது. எனக்கு ஜன்னலோரம் சீட். எனது சீட்டில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை ஏன் எழுப்புவானேன் என்று பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்தேன். அவர் தூங்கியும் போனார். TT வந்து சோதித்த போது அன்னார் வேறு கம்பார்ட்மெண்டில் ஏற வேண்டியவர் மாறி அமர்ந்திருக்கிறார் என்று தெரிய வந்தது. பல நேரங்களில் சமாளிக்கும் TT அன்று விறைப்பு காட்டினார்.எனது சீட் எனக்கு கிடைத்தது.மாறி அமர்ந்தபின் ஏழரை வந்து அருகில் அமர்ந்தது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்க வேண்டும். சமீபத்தில் தடவுற போன் வாங்கியிருக்க வேண்டும். Jio வாழ்கவென்று ஒரு SIM வாங்கிப்போட்டிருக்க வேண்டும். காதில் வயரை மாட்டியவர் செந்தில் கவுண்டமணி காமெடி பார்க்க ஆரம்பித்து, பின்னர் பழைய பாடல்களை கேட்கவாரம்பித்தார். அத்தோடு நிறுத்தி இருந்தால் அவரை ஏழரை என்று விளித்திருக்க மாட்டேன். கூடவே பாட ஆரம்பித்தார். சுருதி சேராத குரல். மெதுவாக முனக ஆரம்பித்தவர் உற்சாகத்துடன் உரக்கக் கத்த ஆரம்பித்தார். பாவம் அவருக்கு தெரியாது அடுத்தவர் அவதி. கிரகணத்தில் ஸ்பர்சம், உச்சம், மோட்சம் என்பது போல அவருக்கு உச்சத்தில் அமைந்த பாட்டு "அம்மம்மா தம்பி என்று நம்பி"
எனது தலை விதியை நொந்துகொண்டு எடுத்த தீர்மானம், கூடிய சீக்கிரம் Bose Noise Cancelling Headphone வாங்குவது என்று ..

English Vocabulary

 ஆங்கிலப் படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட படலம் ...


Vocabulary மட்டும் இருந்தால் பற்றாது pronunciationம் அவசியம் என்று பட்டுத் தெரிந்துகொண்டேன், Chaos என்று எழுதியிருந்தால் அது சாவோஸ் அல்ல   கேயோஸ் என்று திருத்தப்பட்டபின்..   


பத்து என்ற எண்ணுக்கு நாடியா கோமானேஸி என்று மட்டுமே இருந்த நான், இதே நம்பரில் வெளியான படம் பார்த்து மிச்ச விளக்கம் புரிந்துகொண்டேன். 36 - 26 - 36 என்ற அளவுதான் 10 என்று தெளிவாக்கிய புண்ணியம் காதல் இளவரசன் கமலுக்கே .. 


Bo Derekஐ Tarzan the Apeman படத்தில் பார்த்து பிளந்த வாய் இன்னும் மூடவில்லை. படத்தின் கிளைமாக்ஸில் கடற்கரையில் அம்மணி ஈரமான சல்லாத்துணியுடன் நடந்து வரும் காட்சியை கண்டபோது தினசரி காலண்டரில் அன்றைய ராசிபலன் நினைவு வந்தது, விரயம் !   


ராஜாஜி நகரில் உள்ள நவ்ரங் தியேட்டர் எதிரில் ஒரு டீக்கடை (சாகர் என்று ஞாபகம்). கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது ஒரு கலர் டிவி வைத்து வியாபாரத்தை பெருக்கினார். பிறகு மெதுவாக VCR ஒன்று வைத்து கலர் படம் போட ஆரம்பித்தார். கூட்டம் அலை மோதியது. அந்த காலத்திலேயே 50 inch Sony டிவி வைக்கும் அளவிற்கு வியாபாரம். இதெல்லாம் வெறும் A படம்தான். சிவாஜிநகர் வந்தால் X படம் பார்க்கலாம் என்று ஒரு பட்சி கூவியது.


போய் பார்த்தால் சிலேட்டில் சாக்பீஸ் வைத்து "அஞ்சரைக்குள்ள வண்டி" என்று எழுதி இருந்தது. .சாக்குத் திரை போட்டு அரை மணி நேரத்திற்கு 5 ரூபாய் என்று போர்டு வேறு தொங்கியது. உள்ளே போனால் கும்மிருட்டு. கலர் டிவியில் மச மசவென்று எதோ ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோ தெரியவில்லை எல்லா படங்களிலும் வரும் அருவி இதிலும் இருந்தது. அம்மணி குளிக்க ஆயத்தமாகையில் ஐயா குதிரை மீது வந்தார். பிறகு ஒரே பப்பி shame. வியர்த்து விறுவிறுத்து வெளியே வந்தேன்.


இந்த ஆங்கிலம் கற்றுக்கொண்டது போதும் என்று தீர்மானித்து Peter Sellers மற்றும் Mel Brooks படம பார்க்க ஆரம்பித்தேன். Blake Edwardsன் பல படங்கள் அப்போது rerun ஓடிக்கொண்டிருந்தன. காமெடி என்றால் என்ன Jerry Lewis பார்த்துதான் தெரிந்து கொண்டேன். மறைந்த குண சித்திர நடிகர் நாகேஷ் அவர்களின் மானசீக குரு Jerry Lewis என்பது பின்னாளில் படித்தது. "காதலிக்க நேரமில்லை"  படத்தில் Jerry Lewisன் புகைப்படம் நாகேஷின் மேசையில் இருக்கும்.


கமல் சாரின் "குரு", Peter Sellers நடித்த Pink Pantherன் மட்டமான தழுவலே என்று அப்புறம் தெரிந்தது. John Travolta நடித்த Grease திரை படத்தில் வரும் நடனக் காட்சியின் ஈ அடிச்சான் காபியே அபூர்வ சகோதார்களில் வரும் "ராஜா கைய வச்சா.." அன்னாரின் முயற்சி பாராட்டத்தக்கது. தமிழ் படம் பார்க்கும் மக்கள் எங்கே Hollywood படம் பார்க்க போகிறார்கள் ! Commando படத்தின் துவக்கத்தில் வரும் விறகு வெட்டும் காட்சி கேப்டன் பிரபாகரனில்  டப்பா அடிக்கப்பட்டது. இதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வெற்றி விழாவில் காப்பி அடிக்கப்பட்டது.

  

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று சினிமா பார்த்தோம். இதற்கெல்லாம் காசு எங்கேயிருந்து வந்தது என்ற உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது. மாத செலவிற்கு 100 ரூபாய் அப்பா அனுப்புவார். சாப்பாட்டிற்கு என்று 155 ரூபாய்.எண்பதுகளில் இது ஒரு பெரிய தொகை ... தவிர சினிமா டிக்கெட் இரண்டரை அல்லது மூன்று ரூபாய்தான்..நல்ல சினிமா நிறைய பார்த்தேன்.      


Mel Brooksன் "To be or Not To Be" பார்த்த போது நானும் என் நண்பனும் மட்டுமே சிரித்துக் கொண்டிருந்தோம். Bracketக்கு Parenthesis எனும் அதிநவீன வார்த்தை கிட்டியது

Mama Veedu

 வார இறுதியில் மாமா வீட்டிற்கு செல்வது என்பது ஒரு பழக்கமாக இருந்தது. (முன்னர் குறிப்பிட்டிருந்த மாமாக்கள் aka அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்கள்).கடைசி மாமாவுக்கும் எனக்கும் மூன்று வயது மட்டுமே வித்தியாசம். இடைப்பட்டவர் படிக்காத மேதை. அவருக்கு தெரியாதது என்றும் ஒன்றும் இல்லை. எல்லாவற்றை பற்றியும் ஏதாவது தெரிந்து வைத்திருப்பார். சரியான screw driver. எதை வேண்டுமானாலும் கழட்டி மாட்டுவார்.

ரிஷி மூலம் மற்றும் நதி மூலம் (பூர்வீகம்) தருமபுரி என்பதால் தமிழில் சம்பாஷிப்பது வீட்டில் நடைமுறை. பாட்டிக்கு கன்னடத்தில்தான் பேசவேண்டும். பாட்டி ஒரு சகலகலாவல்லி. பாட்டிக்கு தெரிந்த கை வேலைகள் ஏராளம், சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் பாடல்கள் எல்லாம் தெரியும், நல்ல சாரீரம் (சரீரமும் கூட), பூஜை புனஸ்காரங்களில் தீவிர ஈடுபாடு. சமையலில் பிஸ்தா என்று சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். நேரத்தில் நடக்க வேண்டும். சரியான வாய்ப்பு கிட்டியிருந்தால் அல்லது தேடியிருந்தால் வக்கீலாகியிருக்கலாம். அப்பேர்ப்பட்ட பேச்சுத் திறன் !
மாமாக்கள் முரண். கடைசி மாமா தூக்கப் பிரியர். அன்பே வா படத்தில் MGR ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு சோர்ந்து போய் வீடு திரும்புவார். கோப்பில் கையெழுத்திடச் சொன்னால் JB என்ற பேருக்கு J போட்டுவிட்டு தூங்கி விடுவார். இந்த மாமா அதுவும் செய்ய மாட்டார் .. தூங்கி விடுவார் !
வார இறுதியில் அழுக்கு மூட்டையுடன் மாமா வீட்டிற்கு சென்றால் uniform துவைத்து இஸ்திரி போட்டு தரப்படும். சனி இரவு சினிமா பார்க்கலாம். கதை பேசலாம். அல்லது கேரம் விளையாடலாம். வீட்டருகே ஒரு டூரிங் தியேட்டர். என்ன படம் போடலாம் என்று மாமாக்கள் பரிந்துரைப்பார்கள். சேர் டிக்கெட் வாங்கி படம் பார்த்து விட்டு அர்த்த ராத்திரிக்கு வீடு திரும்புவோம். எல்லாம் முடிந்து உறங்கப் போகுமுன் இரண்டு காரியங்கள் செய்வோம்.
ஒன்று மொட்டை மாடிக்கு போய் தம் அடிப்பது.. தாத்தாவுக்கு பயங்கர கடுப்பு. வெளியில் சொல்ல மாட்டார். மொட்டை மாடியில் இன்னும் கொஞ்சம் கதை பேசுவோம். இன்னொன்று.. வீட்டு முன் இருந்த காலியிடத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது. மாமா வீட்டின் முன்புறம் என்பது அடுத்தவர் வீட்டின் பின்புறம். அவர் வீச்சம் தாங்காமல் எங்களை ஒரு நாள் கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென தூங்காமல் காத்திருந்தார்.
நாங்கள் எத்தனிக்கும் நேரத்தில் தலை தூக்கி குரல் உயர்த்தி பேச ஆரம்பித்தார். மூத்த மாமா, "என்ன சார், நீங்களும் வந்து கம்பெனி கொடுப்பீர்கள் என்று பார்த்தால், அங்கேயே நின்று விட்டீர்களே" என்றவுடன் இவர்களை என்ன செய்வது என்று புரியாமல் உள்ளே சென்று கதைவடைத்தார்.அதன் பிறகு எங்களை கண்டு கொள்ள யாருமில்லை. இப்போதெல்லாம் அந்த மாதிரி காலியிடம் எங்கும் காணோம்.
மீண்டுமப்படி காற்று வெளியில் விசர்ஜனம் செய்வதெக்காலம் !— thinking about my childhood.

Bangalore - Here I come !

 கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள். பட்டணம் சேர்ந்து கெட்டவன் நான். கற்ற களவு இன்னும் மறக்கவில்லை. தாத்தாவின் கண்டிப்பான வளர்ப்பில் ஒரு  நல்ல பையன் உருவாகியிருந்தான். "ததோ யுத்த பரிஷ்ராந்தம்", "ஊர்த்துவ மூலம் அதஸ்ஸாகம்", "ஸ்ரீ பூர்ண போத குரு தீர்த்த பயோப்தி பாரா" என்று துவங்கும் பல துதிகள் தாத்தாவின் குரலில் மனனமாகியிருந்தன. மனதில் பலமான ஆன்மிக அஸ்திவாரம் இடப்பட்டிருந்தது. என்ன குட்டிக்கரணம் போட்டாலும் தடம் பிறழாமல் இருக்க இந்த அஸ்திவாரம் பேருதவியாக இருந்தது. பத்தாம் வகுப்பு முடிந்து  மேல்நிலையில் சேர்ந்திருந்த போது நண்பன் ஒருவன் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை காட்டினான்.  இயற்பியல் ஆய்வகத்தில் "Youngs Modulus"  பரிசோதனையில் கம்பி அறுப்பது. வேதியியல் ஆய்வகத்தில் டெஸ்ட் tube ஆட்டையா போடுவது, உயிரியல் ஆய்வகத்தில் அறுப்புக்கு வைத்திருந்த எலியை ஓவிய ஆசிரியையின் மேசையில் ஒளித்து வைத்தது என்று பல ஜாலங்கள் செய்து வந்த காலத்தில் "After SSLC what Next" என்பது போல இருந்த தொழிற்கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரம் மனதை கவர்ந்தது.


விண்ணப்பம் வாங்க பெங்களூர் வந்தேன். மாமா ராஜாஜி நகரில் இருந்து கூட வந்தார். அவருக்கும் இந்த தொழிற்கல்வி பற்றி அபிப்பிராயம் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தோம். Entrance Test எனப்படும் ஸம்ப்ரதாயத்துக்கு அழைப்பு வந்தது. தாத்தாவுக்கு ஒரே நிபந்தனை. "தேர்ச்சி பெற வேண்டும்". மற்றவை பிறகு. செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் இரண்டாவது மாடியில் தேர்வுகள் நடைபெற்றன. அந்த அழகான கல் கட்டிடம் சமீபத்தில் இடித்து தள்ளப்பட்டது மனதுக்கு சங்கடம். போட்டிக்குரிய தேர்வு என்று அது வரை சந்திக்காதது ஒரு மெல்லிய பயத்தை ஏற்படுத்தியது. டூ இண்டு டூ இண்டு டூ = டுட்டுடூ போன்ற சிரமமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 


குளிர் நடுக்கியதில் மூச்சா வந்தது. சுண்டு விரல் காட்டி அனுமதி கேட்டதற்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதியாக வேண்டும். மூச்சா போனதற்கு என்று எக்ஸ்ட்ரா நேரம் கொடுக்கப்பட மாட்டாது என்று கண்டிப்பாக கூறினர், இரண்டு  மாடி இறங்கி வந்து காரியத்தை முடித்த போது படம் வரைந்து பாகம் குறித்த கல்லூரி மாணவர்களின் கைங்கரியங்கள் கண்ணில் பட்டன.  கவர்ந்தது - "இதற்கு மேல் மூச்சா போனால் தீயணைப்பு படையில் சேரவும்" என்ற உயரத்தை குறிக்கும் கோட்டுடன் கூடிய குறிப்பு. 


இவையெல்லாம் தாண்டி வந்த போது ஒரு பொருளை சில மணித்துளிகள் காட்டிவிட்டு படம் வரைய சொன்னார்கள். எனக்கு வந்தது ஒரு spanner. படம் சுமாராக வரைந்திருந்தாலும் "Vanadium Steel" என்ற வார்த்தைகள் கண்ணில் பட்டது. அதை மட்டும் தெளிவாக எழுதி வைத்தேன். தேர்ந்தேடுக்கப் பட்டதற்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். நேர்முகத் தேர்வுக்கு மதியம் போல் அழைத்தார்கள்.   


பொது அறிவு என்பதற்கு ஒரு தனியாக கோனார் தமிழ் உரை போல புத்தகம் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பொழுது போக்குகள் என்ன என்ற கேள்விக்கு தபால் தலைகள் சேகரிப்பது என்றேன். ஜெர்மனியின் தபால் தலையில் என்ன எழுதியிருக்கும் என்று ஆரம்பித்து CTO என்றால் என்ன என்ற குடைந்தார். எல்லாம் முடிந்து ஊர் வந்து சேர்ந்தேன்.


பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்த எனது சகோதரி வந்தார். NTTFல் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டதாக தந்தி வந்திருப்பதாக கூறினார்..  பிரியா விடை ஏதும் கூறியதாக நினைவில்லை. மூட்டை முடிச்சுடன் பெங்களூரு வந்து சேர்ந்தேன். பூணல் போடுவது என்ற ஸம்ப்ரமம் நடந்தேறாததால் சண்டாளனாகவே பெங்களூர் வந்தேன் .        


ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் அரசு பள்ளியில் படித்தவன் நான். படிப்பதிலிருந்த சுட்டித்தனம் ஆங்கிலம் பேசுவதில் இருக்கவில்லை. தமிழ் சினிமாவில் வரும் பால்மணம் மாறாத பாலகன் "விவேக்" போல சைடில் பால் கக்கிக்கொண்டே  #NTTF சேர்ந்தேன். 30 பேர் கொண்ட batchல் பலர் தமிழ் பேசியது வசதியாக போயிற்று என்றாலும் சரளமாக ஆங்கிலம் பேச வராதது ஒரு பலவீனமாகவே இருந்தது. பட்டணத்தில் படித்த சக மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசித்தள்ளினர். எஸ், நோ, ஓகே என்பதை தவிர மற்றவைகள் வாக்கியமாகி வாயில் வருவதற்குள் சம்பாஷணை முடிந்திருந்தது. Vocabularyஐ அதிகப்படுத்த ஒரே வழி novel படிப்பதுதான் என்று தீர்மானம் செய்து Nick Carter மற்றும் Carter Brown நாவல்களை தேர்ந்தேடுத்தேன். ஏன் இந்த இரண்டு கதாசிரியர்கள் என்ற கேள்வி எழுப்பும் நக்கீரர்கள் கூகிள் செய்து images பார்க்கவும். கூடவே James Hadley chase, Harold Robbinsம் உண்டு. சகட்டு மேனிக்கு படித்து தள்ளினேன். Stone For Danny Fisher இன்றும் மனதில் நிற்கிறது ... 


அப்படி இப்படியாக இரண்டு செமெஸ்டர் கழிந்தது. தட்டு தடுமாறி சமாளிக்க முடிந்தது. Irwing Wallaceகு தேறியிருந்தேன். வார இறுதியில் ஆங்கிலப் படங்கள் பார்த்ததும் உண்டு.  Subtitle போட்ட DVD எல்லாம் அப்போது கிடையாது.    கவனித்து கேட்டால் உண்டு இல்லையேல் விவேக்கும் விக்ரமும் ஆங்கிலப்படம் பார்த்தது மாதிரி.  


அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்கள் துணை நின்றனர். எனக்கு 3 வயது மட்டுமே மூத்த மாமாவும் இதில் சேர்த்தி. அவர்களுக்கு நான் ஒரு சின்ன பயல். இவனை ஏன் கெடுப்பானேன் என்ற நல்ல எண்ணம். தள்ளியே வைத்திருந்தனர். ஒரு நாள் போனால் போகிறது என்று ஒரு Joke சொன்னார்கள். சிரித்து வைத்துவிட்டு நான் ஒரு Joke சொல்லவா என்று கேட்டேன். அசைவம் .. அரண்டு போனார்கள். ஜோதியில் ஐக்கியமானேன்.  யாருக்காவது இந்த joke வேண்டுமென்றால் தொலை பேசியில் அழைக்கவும். சத்தம் போட்டு சிரித்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல ..


இன்னமும் வரும்...

Life Expectancy - Myth

சுதந்திரம் வாங்கின காலத்தில் நமது Life Expectancy 32 வருடங்களாக இருந்தது என்று கூகிளப்பன் சொல்கிறார். காகபுசுண்டர் பேர் சொன்னால் ஙே என்று விழிக்கும் நாம் கூகிளப்பன் சொன்னால் மட்டும் நம்புவோம். இதே 2012ல் 65 வருடங்களாக அதிகரித்து விட்டதாக செய்தி ..

இந்த முன்னேற்றத்திற்கு அல்லோபதி எனப்படும் மருத்துவமும், இங்கிலிஷ் மருந்துகளுமே காரணம். கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில் வைப்போம் ! எந்த வைத்தியராவது இன்று Diagnosis எனப்படும் ஆய்வுக்கு நோய் வாய்ப்பட்டவர்களை உள்ளாக்குகிறார்களா என்று பார்த்தால் கிடையாது. போனவுடன் இந்த மற்றும் அந்த பரிசோதனை ரிப்போர்ட் கொண்டுவா என்று ஆரம்பித்து நோண்டி நுங்கெடுத்து விடுகிறார்கள்.
இந்த மருத்துவ பரிசோதனை நிலையங்கள் எல்லாம் Kinder Garden school போல. எல்லாம் package மயம். நம்பர் 1 பரிசோதனை செய்தால் நம்பர் 2 பரிசோதனை இலவசம். Six Sigma தலையில் தீயை வைக்க ! நாம் உஷாராக இல்லா விட்டால் ஆண்களுக்கு நம்பர் 1 பரிசோதனை செய்து விட்டு, Congratulations ! நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று ஒரு சாக்லேட் கொடுத்து விடுவார்கள். எல்லாம் கத்து குட்டிகள். அவர்களும்தான் என்ன செய்வார்கள். போக வர எல்லா கார்பொரேட் நிறுவனங்களும் Free Annual Health Checkup என்று ஊழியர்களின் நலன் கருதி அறிவித்து விடுகிறார்கள். இதைத் தவிர Pre Employment Medical Check வேறு. நாம் இங்கே அங்கே பிராண்டி உண்டி உடைத்து Master Health Check போனால் கூட்டம் "கபாலி" படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போன மாதிரி இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றுடன் போனால் முட்ட முட்ட தண்ணீர் குடிக்க சொல்லிவிட்டு ஸ்கேன் செய்ய ஒரு gel தடவி அமுக்கும் போது படும் சிரமம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தசாவதாரம் கிருஷ்ணவேணி பாட்டி பலராம் நாயுடுவிடம் சொன்னது மாதிரி ஆகி விடுமோ என்ற பயம் வேறு !
காலையில் போனால் மதியம் போல ஆகிவிடும். அதற்கப்புறம் பைரவா படமெல்லாம் பார்க்க போக முடியாது. அப்பேர்ப்பட்ட ஆயாசம். வீட்டிற்கு வந்து எதையும் சாப்பிடவும் முடியாது.. குமட்டும்..
முதலில் கை வைக்குமிடம் Sugar. நன்றாக இருப்பவனிடம் borderline sugar என்று சொல்லி பேதிக்கு கொடுப்பார்கள். கடந்த 20 வருடங்களில் இந்த சுகர் லெவல் எத்தனை முறை மாறி இருக்கிறது என்று பார்த்தால் புரியும் இவர்களின் புரட்டு. இவ்வளவு இருந்தால் நார்மல் என்று தீர்மானிப்பது WHO.. இந்த நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரென்று பார்த்தால் அத்தனை மருந்து கம்பெனிகளின் பிரதிநிதிகள். இவர்களே தீர்மானித்து இவர்களே மருந்து கொடுப்பார்கள்.
நம் பாட்டுக்கு சிவனே என்று பனங்கல்கண்டும், பாகு வெல்லமும் உபயோகப் படுத்தி கொண்டிருந்தவர்களிடம் அஸ்கா சக்கரை என்று அறிமுகப்படுத்தினார்கள். நமக்குதான் சுய அறிவே கிடையாதே. ஆங்கிலத்தில் எது படித்தாலும் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளைக்காரன் செய்த மூளைச் சலவை அப்படி.
மேலை நாட்டவரின் சாதுர்யம் அல்லது சூழ்ச்சியை பாராட்ட வேண்டும். அவர்கள் காட்டியது சக்கரை எனும் வெள்ளை காக்காய். குறி வைத்ததென்னவோ சக்கரை ஆலையில் வரும் கழிவான "Molasses". இந்த கழிவு ஒரு சல்லிசான விலைக்கு சாராய கம்பெனிக்கு விற்கப்படும். அதன்பின் பல லட்சம் லிட்டர் சாராயமாக காய்ச்சி குப்பியில் அடைத்தால் இருந்தே இருக்கு TASMAC. தெரியாமலா சொன்னார்கள் குடி மக்கள் என்று ! இந்த போதை கிறுகிறுப்பை உண்டாக்கி மக்களை அடிமையாக்கும். குற்ற உணர்வை இழக்க செய்து போதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டும். திருந்தலாம் என்று நினைப்பவனுக்காகவே "மச்சி, ஓபன் தி பாட்டில்" எனும் கருத்தாழம் மிக்க பாடல்.
சரக்கு முதலில் கல்லீரலை கரைத்து பின்னர் சிறுநீரகத்தில் தன் வேலையே காட்டும். போதாக் குறைக்கு மருத்துவ பரிசோதனையில் ஒரு consultant கேள்வி பதில் session நடத்துவார். மறக்காமல், "டூ யு ட்ரின்க்" என்று கேட்பார். ஹி ஹி என்று இளித்துக்கொண்டே "ஆம்" என்றும் சொல்லாமல் "இல்லை"
என்றும் சொல்லாமல் ஒரு மாதிரியாக தலை ஆட்டியதை அவர் பக்காவாக கட்டம் கட்டியிருப்பார். மூச்சா டெஸ்ட் ரிசல்ட் காட்டும் borderline positiveஐ பூதாகாரமாக்கி, தினமும் இந்த மாத்திரை சாப்பிடுங்கோ என்று பரிந்துரை செய்வார்கள். எத்தனை நாளுக்கு என்று கேட்டால், "ஆயுசு பரியந்தம்". Side effect என்பதைப் பற்றிய கவலையே கிடையாது. எந்த Rep அதிகம் கமிஷன் என்று சொன்னானோ அந்த மருந்துதான்.
இன்னமும் கிளறுவேன்...

Wednesday, December 03, 2025

Tirupati 2

 ஜெயிலர் படத்தில் வர்மனுக்கு வந்தது போல ஒரு ஆசை. பெரிய ஆசையெல்லாம் கிடையாது. சின்ன ஆசைதான். ஒரு முறையாவது மலையப்பனை சற்று அருகாமையில் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை.  


திருப்பதிக்கு லட்டு கொடுத்த வைபவத்திற்கு பின் ஐயனை வருடம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தரிசிப்பது வழக்கமாயிற்று. கோவிட் கைங்கர்யத்தில் 5 வருடம் அதில் துண்டு விழுந்தது. இந்த வருடம்  மார்ச் மாதத்தில் கல்யாண உற்சவத்திற்கு டிக்கெட் எடுத்து தரிசனம் ஈடேறியது. அப்போதுதான் Srivani Break Darshan பற்றி கேள்விப்பட்டேன். ஆசை யாரை விட்டது. அதுவும் நெருக்கித் தள்ளும் கூட்டமில்லாமல் ஐயனை தரிசிக்கலாமென்று கேள்விப்பட்டத்திலிருந்து அந்த ஆசை. பணத்தை கட்டுவது டிக்கெட் போடுவது எல்லாம் நல்லபடியாக நடந்தது.

அந்த நாள் நெருங்கும்போதுதான் மழை. அடைமழை. திருப்பதிக்கு ஆரஞ்சு Alert கொடுத்திருந்தார்கள். இதற்கெல்லாம் பயந்தால் எப்படியென்று எண்ணி திருப்பதிக்கும் வந்தாச்சு. ஒரு நாள் கையில் இருந்ததால் குடிமல்லம் பரசுராமேசுவரரை தரிசிக்க முடிவு செய்தோம். ஸ்வர்ணமுகி ஆற்றில் 60 வருடத்திற்கு ஒரு முறை பெருக்கெடுத்து சிவனை அணைத்து செல்லும் என்று படித்த ஞாபகம். 2005ல் இந்த நிகழ்வு என்றும் படித்திருந்தேன். அருகே செல்லும்போது பொழுது சாய்ந்திருந்தது. இருட்டு சூழத் தொடங்கி இருந்த நேரத்தில் ஓடையின் தரைப்பாலத்தில் முழங்கால் அளவு நீரோட்டம். கோவிலுக்குள் நுழைந்தவுடன் மழை கொட்டியது. மெதுவாக அந்த ஓடையை தாண்டி திரும்ப வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் அம்மாவுக்கு முதல் attendance போடுவோமென்று போனால் மறுபடியும்  சரியான மழை. ஏறக்குறைய நீந்திக்கொண்டே தரிசனம் செய்தோம். பக்கத்திலுள்ள அண்ணன் கோவிந்தராஜனையும் தரிசித்தோம். கிருமி கண்ட சோழன் மஹாத்மீயம் பற்றி கோவில் பிரகாரத்திலும் இணையத்திலும் படித்து தெரிந்து கொண்டோம். சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜனை பிச்சாவரத்திற்கு அருகே கடலில் கரைத்ததை தசாவதாரத்தில் ஆண்டவர் கோடிட்டு காட்டி இருந்தார்.

போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் உடையவர் ஏகப்பட்ட வேலை செய்திருக்கிறார். கில்லாடிதான் ! பார்த்தசாரதி பெருமாள் கொடுத்த இடத்தில் அண்ணன் கோவிந்தராஜன் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். தம்பி மலையப்பன் கல்யாணத்திற்கு குபேரனிடம் பெற்ற கடன் சம்பந்தமாக கணக்கு வழக்கு அண்ணன்தான் கவனிப்பதாகவும் ஐதீகம். பெருமாள் என்றாலே "ஜெருகண்டி"தான் போலும். கூட்டமில்லாத கோவிலில் நிதானமாக சேவிக்கலாமென்று பார்த்தால் அதற்கு வழியில்லை. அடித்து துரத்தி விட்டார்கள். ஸ்ரீரங்கத்தில் பெருமாளை பூச்சாண்டி சேவையில் தரிசித்தது கூட சுலபமாக இருந்தது.

ஒரு வழியாக மலைக்கு வந்து சேர்ந்தால் கண்மண் தெரியாத மழை, நந்தகத்தில் ஜாகை என்று தெரிந்துகொண்டு அங்கே வந்தால் நச நசவென்று ஈரம். பெரிய ரூம், சம்பந்தமில்லாத பெரிய கட்டில் மற்றும் ஒரு சின்ன கட்டில். ரெண்டு சோஃபா, வழுக்கும் குளியலறை. ரெண்டு commode (Indian & Western). Geycer வேலை செய்தது. Lobbyல் க்ரானைட் போட்டு இழைத்திருந்தார்கள். Water Purifierல் இருந்து ஒழுகிய தண்ணீர் வழியில்லை. மட்டமான பிளம்பிங் போலும். எங்கு பார்த்தாலும் சுவர் உப்பியிருந்தது.  சிப்பந்திகள் சில்லறையில் மட்டுமே  குறியாக இருந்தார்கள். Sarangee வரை செல்ல திராணியில்லாததால் பக்கத்தில் இருந்த கையேந்தி பவனில் இரவு சாப்பாடு.

காலையில் 10.15க்கு வரவேண்டும் என்று டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். யாரோ சொன்னதை நம்பி பயோமெட்ரிக் counterக்கு சென்றோம். ஒரே மழையப்பன். இங்கெல்லாம் பருப்பு வேகாது, Supadham வெல்லண்டி என்று செப்பினார்கள். கொட்டும் மழையில் படியேறி அங்கே போனால் VQC 1 வெல்லச் செப்பினார்கள். அங்கே வெல்லினால் பக்கம் வரை காரில் வந்திருக்கலாம் என்று தெரிந்தது. பெருமாள் வச்சு செய்வது என்று தீர்மானித்த பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இடையில் பிரசவ வைராக்கியம் வேறு. இதற்கு மேல் இங்கு வருவதில்லை என்று. அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ நட ... என்று ஒரு mind voice கேட்டது. உள்ளே ஊரி(றி)க்கொண்டு போனால் மஹாதுவாரத்தில் நிறுத்தி எங்கே வந்தாய் என்று கேள்வி. Sreevani darshan என்று சொன்னால் Free Darshanஆ என்று கேட்டார்கள். அதற்குள் ஒருவர் உள்ளே அனுப்பச்சொல்லி கயிற்றை தூக்கிவிட்டார். வாழ்நாளில் Vendi Vaakilai தள்ளுமுள்ளு இல்லாமல் தாண்டியதே இல்லை. நெருக்கும் கூட்டத்தில் முழி பிதுங்கி கால்கள் இரண்டும் அந்தரத்தில் இருக்க அப்படியே நசுக்கி Bangaru Vaakilu வரை கொண்டு செல்வார்கள்.இந்த முறை நாங்களாக நடந்து சென்றோம். Queueவை விலக்கி வலது பக்கமாக போக சொன்னார்கள். அப்படியே சென்று எப்பொழுதும் ஜெருகண்டி சொல்லும் இடத்தில் மறுபடி ஐக்கியமானோம். இன்னும் இரண்டு வாசல்களை தாண்டி பெருமாள் முன்னே இரண்டு நொடி நிற்க முடிந்தது. 

எந்த கோரிக்கையும் நினைவுக்கு வரவில்லை. கண் சிமிட்ட மனமில்லை. வெளியே வந்ததற்கு அப்புறம் Calendaril பார்த்த பெருமாள் மட்டுமே நினைவில் வந்தது. உண்டியலை பார்த்தவுடன் லட்டு வாங்க கொடுத்த சீட்டை பெருமாள் பிடிங்கிய ஞாபகம் வந்தது ....

மீண்டும் அழை மலையப்பனே !