Comic fan

Tuesday, December 23, 2025

பச்சிலைப் படலம் ...

தொழில் நுட்ப கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் (83 or 84). கிறிஸ்துமஸ் வர ஒரு வாரம் இருக்கும்போதே விழா எடுத்து விடுவார்கள். அதன் பிறகு 10 நாள் விடுமுறை வரும். விழாக்கொண்டாட்டத்தில் மாணவர் அனைவரும் சேர்ந்து ஆடல், பாடல் கொண்டாட்டம்தான். புகை பிடிப்பது என்ற நல்ல பழக்கத்தை ஆரம்பித்திருந்த காலம்.
மாதத் துவக்கத்தில் வில்ஸ் பில்டர்..மாதம் தேய தேய பீடி என்பது எழுதாத விதி. ஹாஸ்டெலில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. அறிவியலில் சுமாரான மார்க் வாங்கியிருந்த நண்பர்கள் கண்டுபுடித்தது என்னவென்றால் மொட்டை மாடியில் பிடித்தால் வார்டனின் மூக்குக்கு எட்டாது என்னும் அரிய விடயம் அவர் ஒரு துப்பறியும் சாம்பு. எப்படியோ கண்டுபிடித்து விட்டார். இருட்டில் மேலே வர தயங்கி செக்யூரிட்டியை கூட வைத்துக்கொண்டு மாடி ஏறினார். சத்தம் கேட்காமலிருக்க வேண்டுமென்று காலணி கழற்றி விட்டு வெறும் காலில் நடந்து வந்தார். பின்னாலிருந்த செக்யூரிட்டி லாடம் வைத்த ஷூ போட்டுக்கொண்டு பைய படியேறினார். இது போதாதா .. மக்கள் விட்டனர் சவாரி.
30 பேர் இருந்து batchல் 19 பேர் புகை பிடிப்பவர்கள். தலையணையின் கீழ் எப்போதும் சரக்கு இருக்கும். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்கு திருட்டுத்தனமா நழுவி ஒரு வெண் சுருட்டை மூன்று பேர் பகிர்ந்தது இன்னும் மறவாத களவு. இன்று சந்தித்தாலும் அப்படியே ..
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பன் "இளைய நிலா.. பொழிகிறது" பாடினான். நண்பனுக்கு "ழ"னா வராது. சுருதியும் சேரவில்லை. முதல் வரி பாடிவிட்டு, மூத்த சகோதரியை கோபத்துடன் அழைத்தான். மைக்கில் எல்லாருக்கும் கேட்டது. சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. அடுத்த குரூப் புதிய ராமாயணம் படைத்தார்கள்.
சந்தேகத்திற்குறிய முறையில் சில நண்பர்கள் நழுவினர் மொட்டை மாடியை நோக்கி.. மேலே சென்று பார்த்தால் தனியாக ஒரு கும்பல் எதையோ உள்ளங்கையில் வைத்து கசக்கி ஆராய்ந்து கொண்டிருந்தனர். பிறகு அந்த கலவையை வெண் சுருட்டுக்குள் அடைத்து பற்ற வைத்தனர். வித்யாசமான நெடி. என்னடா இது என்று கேட்டால், கன்னடத்தில் "சொப்பு" என்றான். என்ன இலையாக இருக்கும் என்று வியந்து கொண்டிருந்த போது, "பேக்கா" என்றான். வந்தது வந்தாச்சு, என்னதான் நடக்குதென்று பார்ப்பதற்காக கையில் வாங்கிக்கொண்டேன்.
புகையை நெஞ்சார இழுத்தேன். மூன்றாவது முறை நெஞ்சில் கழுதை உதைத்தது போலிருந்தது. கண்ணைக் கட்டியது. தலை சுற்ற ஆரம்பித்தது. மெதுவாக படியிறங்கி ரூமிற்கு போய் விடலாம் என்று எட்டிப் பார்த்தால் அதல பாதாளமாய் தெரிந்தது படிக்கட்டு. கைப்பிடியை இறுக்கமாக பிடித்து கொண்டு படியிறங்க ஆரம்பித்தேன். படிகள் நீண்டுகொண்டே போயின. பல மணி நேரம் போன மாதிரி இருந்தது. ரூம் வந்து சேர்ந்தது. செய்யக்கூடாத ஒன்றை செய்தேன். தலை சாய்த்தேன். ப்ரம்மஹத்திகள் முதலிலேயே சொல்லியிருக்கலாம் படுக்காதே என்று. Infinity radius கொண்ட ராட்சத ராட்டினம் சுற்றியது. குடல் வாய்க்கு வந்தது.
கண் திறந்து பார்த்தால் இரண்டு ப்ரம்மஹத்திகள் moon விளையாடிக்கொண்டிருந்தன. அது என்ன விளையாட்டு என்று பிறகு சொல்கிறேன். முகம் அலம்பினால் தெளியுமோ என்று எண்ணி தட்டு தடுமாறி wash basinல் உள்ள கண்ணாடியில் பார்த்தால் கண்ணைக் காணோம். எப்படியோ மறுபடியும் படுக்கைக்கு வந்து வண்டி மலையேறியது. அடுத்த நாள் விழிப்பு வந்த போது காட்பாடி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன் சித்தூர் செல்லும் பஸ் பிடிக்க. "நடுவுல ஒரு பக்கத்தை காணோம்"
விடுமுறை முடிந்து திரும்பி வந்து அந்த நண்பனிடம் விளக்கம் கேட்ட போது சிரித்தான். அது ஒரு amplifier. எந்த உணர்வையும் பல மடங்காக்கும். பயமும் இதில் சேர்த்தி. செய் முறை விளக்கத்துடன் அடுத்த trial அரங்கேறியது. லாகிரி வஸ்துவின் வீரியம் விளங்கியது.
பல வருடங்கள் கழித்து இந்த வீர தீர பிரதாபத்தை பற்றி பீற்றிக் கொண்டிருந்த போது ஒரு ஞானி மண்டையில் கொட்டி அது அப்படியல்ல என்று மாற்று செயல் முறை கூறினார். ஆட்டுப்பாலில் பச்சிலையை ஊற வைத்து, வெந்நீர் காய வைக்கும் அடுப்பின் புகை போக்கியில் மூங்கில் குழையில் அடைத்து வைக்க வேண்டும், சில நாட்கள் கழித்தெடுத்து, இளநீரில் மூன்று துளையிட்டு, நாணலில் பச்சிலையை பக்குவமாக அடைத்து, organic ஹூக்கா போல உபயோகிக்க வேண்டுமென்றார். வெண்ணையை உருக்கி புகையாக்கி உறிஞ்சுவது போலிருக்கும். மேகத்தை நெஞ்சில் சேர்ந்தாற் போல இருக்கும் என்று வேறு உசுப்பேத்தி விட்டார். செய்து பார்க்க நேரம் அமையவில்லை. அன்னாரிடம் அவர் பேர் சொல்வதில்லை என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்... அன்பர் யாரென்று நீங்கள் யூகித்தால் நான் பொறுப்பல்ல.— feeling naughty.

Train Journeys

 இரயில் பயணங்களில் ..

இதன் சுகம் பயணித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தாத்தாக்கள் இரண்டு பேரும் Indian Railwaysல் வேலை பார்த்தவர்களாக இருந்ததால் வருடத்திற்கு சில முறை பாஸ் உண்டு. கூட ஒட்டிக்கொள்ளும் எனக்கு மட்டும் டிக்கெட்வாங்க வேண்டியிருந்தது. புகைவண்டியில் ஆரம்பித்தது இந்த பயணம். வேண்டுமானால் நிற்கலாம். சற்று நடக்கலாம். சுச்சா, கக்கா போகலாம் என்ற பல வசதிகள் பிரமிப்பூட்டின. கடைசி வரை சொம்பு எட்டாமல் போனது வேறு கதை.
படிக்கும் காலத்தில் concession டிக்கெட் இருந்தது. மும்பை வரை சென்று வரும் பேறு கிட்டியது. சயனித்துக்கொண்டே பயணிப்பது என்ற சுகம் ஈடேறியது, உதயான் எக்ஸ்பிரஸ் எனும் இரயிலில். கூட வந்த மார்வாடிக் குடும்பம் தங்களுக்கு மட்டுமன்றி சக பயணிகளுக்கு தின்பண்டங்கள் கொண்டு வந்திருந்தனர். முழு நாள் பயணம் அதுவே முதல் முறை. அங்கங்கே இரயில் நின்ற போது பிரட் ஆம்லெட் வாங்கி சாப்பிட்டோம். ஸ்டேஷனில் உள்ள குழாயில் நீர் அருந்தினோம். டீயும் காபியும் சில இடங்களில் கிடைத்தது. வழியில் லோனாவாலா சிக்கி எனப்படும் கடலை மிட்டாயை பை நிறைய வாங்கினோம். கீழ் பெர்த்தில் தூங்கியவர் கல்யாணில் இறங்கும் போது, அவரது மிட்டாய் பொட்டலத்தை மறந்து விட்டுப் போனார். அதை எடுத்த குற்றத்திற்கான தண்டனை பல வருடங்கள் கழித்து தூத்துக்குடியிலிருந்து வந்த போது கிடைத்தது. சந்தித்த நபர்களும், சம்பாஷணைகளும் இரயில் பயணத்தின் மீது தீராக் காதலை உருவாக்கியது.
அலுவலக வேலை நிமித்தமாக ஒரு முறை தூத்துக்குடி சென்று திரும்பும் போது மக்ரூன் பிஸ்கெட் வாங்கி வந்தேன். மற்ற கம்பார்ட்மெண்டில் பேசிக்கிக்கொள்ளும் (கொல்லும்) சக பயணிகள் ஏசி கம்பார்ட்மெண்டில் ஏறியவுடன் ஏன் முறைத்துக் கொள்கிறார்கள் என்று இன்னமும் புரியவில்லை. பக்கத்துக்கு பெர்த் மாமா அரசாங்க அலுவலர் போல தெரிந்தது. இரண்டு மூன்று பேர் மூட்டை சுமந்து வந்தனர். சலாம் போட்டு விடை பெற்றனர். அன்னார் தாம்பரத்தில் இறங்க வேண்டியிருந்தது. தடபுடலாக வண்டியேறிய சிலர் வண்டியிலிருந்து அவரையும் அவரது மூட்டை முடிச்சுகளையும் இறக்கினர், எனது மக்ரூன் பிஸ்கெட் பெட்டியையும் சேர்த்து. அவர்களது ஆர்வக்கோளாறு அல்லது விசுவாசம், எனது கவனமின்மை. எழும்பூரில் இறங்க வேண்டிய நான் மக்ரூன் பிஸ்கெட் பெட்டியை தேடினால், மும்பையில் லவட்டிய லோனாவாலா சிக்கி சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது.
இரவுப் பயணம் என்பது சில நேரங்களில் வரமாகவும், பல நேரங்களில் சாபமாகவும் அமைகிறது, சக பயணிகளை பொறுத்து. சிலருக்கு வீட்டில் கிடைக்காத பிரைவசி இரயிலில் கிடைப்பதால் இரவு பகல் பாராமல், உரக்கப் பேசி அடுத்தவர் உறக்கத்தை கெடுக்கின்றனர். சிலருக்கு விளக்கு அணைக்கக் கூடாது. மூடு வந்துவிடும் போல ! சில கொடுத்து வைத்த மகராசர்கள் ஏறினார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் (பலத்த குறட்டையுடன்). மூலாதாரத்தில் ஆரம்பித்து சஹஸ்ராரம் வரை சென்று மீண்டு வரும். இரயில் சத்தத்தையும் மீறிய அசுர சாதகம்.
சமீபத்திய பயணம் சென்னைக்கு. இரட்டை தளமுள்ள இரயிலில் பயணம். என்ன மாயமோ தெரியவில்லை எப்போதும் கீழ் தளத்திலேதான் சீட் கிடைக்கிறது. கால் நீட்ட வசதி கிடையாது. சற்றே கோணிக்கொண்டு அமர்ந்தால் ஓகே. குறைந்த அளவு லக்கேஜ் என்பது நம் மக்களுக்கு பழக்கமே இல்லை முடிந்தால் வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் இரயிலில் ஏற்ற வேண்டும். குறைந்த பட்சம் தலைக்கு 5 லக்கேஜாவது இருக்க வேண்டும் என்று சில எழுதப்படாத விதிகள். அடுத்தவனின் கால் சந்தில் இடம் இருந்தால் போதும், ஒரு மூட்டையை அங்கே இறக்க வேண்டியதுதான்.
இரயில் கிளம்பியது. எனக்கு ஜன்னலோரம் சீட். எனது சீட்டில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை ஏன் எழுப்புவானேன் என்று பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்தேன். அவர் தூங்கியும் போனார். TT வந்து சோதித்த போது அன்னார் வேறு கம்பார்ட்மெண்டில் ஏற வேண்டியவர் மாறி அமர்ந்திருக்கிறார் என்று தெரிய வந்தது. பல நேரங்களில் சமாளிக்கும் TT அன்று விறைப்பு காட்டினார்.எனது சீட் எனக்கு கிடைத்தது.மாறி அமர்ந்தபின் ஏழரை வந்து அருகில் அமர்ந்தது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்க வேண்டும். சமீபத்தில் தடவுற போன் வாங்கியிருக்க வேண்டும். Jio வாழ்கவென்று ஒரு SIM வாங்கிப்போட்டிருக்க வேண்டும். காதில் வயரை மாட்டியவர் செந்தில் கவுண்டமணி காமெடி பார்க்க ஆரம்பித்து, பின்னர் பழைய பாடல்களை கேட்கவாரம்பித்தார். அத்தோடு நிறுத்தி இருந்தால் அவரை ஏழரை என்று விளித்திருக்க மாட்டேன். கூடவே பாட ஆரம்பித்தார். சுருதி சேராத குரல். மெதுவாக முனக ஆரம்பித்தவர் உற்சாகத்துடன் உரக்கக் கத்த ஆரம்பித்தார். பாவம் அவருக்கு தெரியாது அடுத்தவர் அவதி. கிரகணத்தில் ஸ்பர்சம், உச்சம், மோட்சம் என்பது போல அவருக்கு உச்சத்தில் அமைந்த பாட்டு "அம்மம்மா தம்பி என்று நம்பி"
எனது தலை விதியை நொந்துகொண்டு எடுத்த தீர்மானம், கூடிய சீக்கிரம் Bose Noise Cancelling Headphone வாங்குவது என்று ..

English Vocabulary

 ஆங்கிலப் படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட படலம் ...


Vocabulary மட்டும் இருந்தால் பற்றாது pronunciationம் அவசியம் என்று பட்டுத் தெரிந்துகொண்டேன், Chaos என்று எழுதியிருந்தால் அது சாவோஸ் அல்ல   கேயோஸ் என்று திருத்தப்பட்டபின்..   


பத்து என்ற எண்ணுக்கு நாடியா கோமானேஸி என்று மட்டுமே இருந்த நான், இதே நம்பரில் வெளியான படம் பார்த்து மிச்ச விளக்கம் புரிந்துகொண்டேன். 36 - 26 - 36 என்ற அளவுதான் 10 என்று தெளிவாக்கிய புண்ணியம் காதல் இளவரசன் கமலுக்கே .. 


Bo Derekஐ Tarzan the Apeman படத்தில் பார்த்து பிளந்த வாய் இன்னும் மூடவில்லை. படத்தின் கிளைமாக்ஸில் கடற்கரையில் அம்மணி ஈரமான சல்லாத்துணியுடன் நடந்து வரும் காட்சியை கண்டபோது தினசரி காலண்டரில் அன்றைய ராசிபலன் நினைவு வந்தது, விரயம் !   


ராஜாஜி நகரில் உள்ள நவ்ரங் தியேட்டர் எதிரில் ஒரு டீக்கடை (சாகர் என்று ஞாபகம்). கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது ஒரு கலர் டிவி வைத்து வியாபாரத்தை பெருக்கினார். பிறகு மெதுவாக VCR ஒன்று வைத்து கலர் படம் போட ஆரம்பித்தார். கூட்டம் அலை மோதியது. அந்த காலத்திலேயே 50 inch Sony டிவி வைக்கும் அளவிற்கு வியாபாரம். இதெல்லாம் வெறும் A படம்தான். சிவாஜிநகர் வந்தால் X படம் பார்க்கலாம் என்று ஒரு பட்சி கூவியது.


போய் பார்த்தால் சிலேட்டில் சாக்பீஸ் வைத்து "அஞ்சரைக்குள்ள வண்டி" என்று எழுதி இருந்தது. .சாக்குத் திரை போட்டு அரை மணி நேரத்திற்கு 5 ரூபாய் என்று போர்டு வேறு தொங்கியது. உள்ளே போனால் கும்மிருட்டு. கலர் டிவியில் மச மசவென்று எதோ ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோ தெரியவில்லை எல்லா படங்களிலும் வரும் அருவி இதிலும் இருந்தது. அம்மணி குளிக்க ஆயத்தமாகையில் ஐயா குதிரை மீது வந்தார். பிறகு ஒரே பப்பி shame. வியர்த்து விறுவிறுத்து வெளியே வந்தேன்.


இந்த ஆங்கிலம் கற்றுக்கொண்டது போதும் என்று தீர்மானித்து Peter Sellers மற்றும் Mel Brooks படம பார்க்க ஆரம்பித்தேன். Blake Edwardsன் பல படங்கள் அப்போது rerun ஓடிக்கொண்டிருந்தன. காமெடி என்றால் என்ன Jerry Lewis பார்த்துதான் தெரிந்து கொண்டேன். மறைந்த குண சித்திர நடிகர் நாகேஷ் அவர்களின் மானசீக குரு Jerry Lewis என்பது பின்னாளில் படித்தது. "காதலிக்க நேரமில்லை"  படத்தில் Jerry Lewisன் புகைப்படம் நாகேஷின் மேசையில் இருக்கும்.


கமல் சாரின் "குரு", Peter Sellers நடித்த Pink Pantherன் மட்டமான தழுவலே என்று அப்புறம் தெரிந்தது. John Travolta நடித்த Grease திரை படத்தில் வரும் நடனக் காட்சியின் ஈ அடிச்சான் காபியே அபூர்வ சகோதார்களில் வரும் "ராஜா கைய வச்சா.." அன்னாரின் முயற்சி பாராட்டத்தக்கது. தமிழ் படம் பார்க்கும் மக்கள் எங்கே Hollywood படம் பார்க்க போகிறார்கள் ! Commando படத்தின் துவக்கத்தில் வரும் விறகு வெட்டும் காட்சி கேப்டன் பிரபாகரனில்  டப்பா அடிக்கப்பட்டது. இதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வெற்றி விழாவில் காப்பி அடிக்கப்பட்டது.

  

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று சினிமா பார்த்தோம். இதற்கெல்லாம் காசு எங்கேயிருந்து வந்தது என்ற உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது. மாத செலவிற்கு 100 ரூபாய் அப்பா அனுப்புவார். சாப்பாட்டிற்கு என்று 155 ரூபாய்.எண்பதுகளில் இது ஒரு பெரிய தொகை ... தவிர சினிமா டிக்கெட் இரண்டரை அல்லது மூன்று ரூபாய்தான்..நல்ல சினிமா நிறைய பார்த்தேன்.      


Mel Brooksன் "To be or Not To Be" பார்த்த போது நானும் என் நண்பனும் மட்டுமே சிரித்துக் கொண்டிருந்தோம். Bracketக்கு Parenthesis எனும் அதிநவீன வார்த்தை கிட்டியது

Mama Veedu

 வார இறுதியில் மாமா வீட்டிற்கு செல்வது என்பது ஒரு பழக்கமாக இருந்தது. (முன்னர் குறிப்பிட்டிருந்த மாமாக்கள் aka அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்கள்).கடைசி மாமாவுக்கும் எனக்கும் மூன்று வயது மட்டுமே வித்தியாசம். இடைப்பட்டவர் படிக்காத மேதை. அவருக்கு தெரியாதது என்றும் ஒன்றும் இல்லை. எல்லாவற்றை பற்றியும் ஏதாவது தெரிந்து வைத்திருப்பார். சரியான screw driver. எதை வேண்டுமானாலும் கழட்டி மாட்டுவார்.

ரிஷி மூலம் மற்றும் நதி மூலம் (பூர்வீகம்) தருமபுரி என்பதால் தமிழில் சம்பாஷிப்பது வீட்டில் நடைமுறை. பாட்டிக்கு கன்னடத்தில்தான் பேசவேண்டும். பாட்டி ஒரு சகலகலாவல்லி. பாட்டிக்கு தெரிந்த கை வேலைகள் ஏராளம், சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் பாடல்கள் எல்லாம் தெரியும், நல்ல சாரீரம் (சரீரமும் கூட), பூஜை புனஸ்காரங்களில் தீவிர ஈடுபாடு. சமையலில் பிஸ்தா என்று சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். நேரத்தில் நடக்க வேண்டும். சரியான வாய்ப்பு கிட்டியிருந்தால் அல்லது தேடியிருந்தால் வக்கீலாகியிருக்கலாம். அப்பேர்ப்பட்ட பேச்சுத் திறன் !
மாமாக்கள் முரண். கடைசி மாமா தூக்கப் பிரியர். அன்பே வா படத்தில் MGR ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு சோர்ந்து போய் வீடு திரும்புவார். கோப்பில் கையெழுத்திடச் சொன்னால் JB என்ற பேருக்கு J போட்டுவிட்டு தூங்கி விடுவார். இந்த மாமா அதுவும் செய்ய மாட்டார் .. தூங்கி விடுவார் !
வார இறுதியில் அழுக்கு மூட்டையுடன் மாமா வீட்டிற்கு சென்றால் uniform துவைத்து இஸ்திரி போட்டு தரப்படும். சனி இரவு சினிமா பார்க்கலாம். கதை பேசலாம். அல்லது கேரம் விளையாடலாம். வீட்டருகே ஒரு டூரிங் தியேட்டர். என்ன படம் போடலாம் என்று மாமாக்கள் பரிந்துரைப்பார்கள். சேர் டிக்கெட் வாங்கி படம் பார்த்து விட்டு அர்த்த ராத்திரிக்கு வீடு திரும்புவோம். எல்லாம் முடிந்து உறங்கப் போகுமுன் இரண்டு காரியங்கள் செய்வோம்.
ஒன்று மொட்டை மாடிக்கு போய் தம் அடிப்பது.. தாத்தாவுக்கு பயங்கர கடுப்பு. வெளியில் சொல்ல மாட்டார். மொட்டை மாடியில் இன்னும் கொஞ்சம் கதை பேசுவோம். இன்னொன்று.. வீட்டு முன் இருந்த காலியிடத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது. மாமா வீட்டின் முன்புறம் என்பது அடுத்தவர் வீட்டின் பின்புறம். அவர் வீச்சம் தாங்காமல் எங்களை ஒரு நாள் கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென தூங்காமல் காத்திருந்தார்.
நாங்கள் எத்தனிக்கும் நேரத்தில் தலை தூக்கி குரல் உயர்த்தி பேச ஆரம்பித்தார். மூத்த மாமா, "என்ன சார், நீங்களும் வந்து கம்பெனி கொடுப்பீர்கள் என்று பார்த்தால், அங்கேயே நின்று விட்டீர்களே" என்றவுடன் இவர்களை என்ன செய்வது என்று புரியாமல் உள்ளே சென்று கதைவடைத்தார்.அதன் பிறகு எங்களை கண்டு கொள்ள யாருமில்லை. இப்போதெல்லாம் அந்த மாதிரி காலியிடம் எங்கும் காணோம்.
மீண்டுமப்படி காற்று வெளியில் விசர்ஜனம் செய்வதெக்காலம் !— thinking about my childhood.

Bangalore - Here I come !

 கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள். பட்டணம் சேர்ந்து கெட்டவன் நான். கற்ற களவு இன்னும் மறக்கவில்லை. தாத்தாவின் கண்டிப்பான வளர்ப்பில் ஒரு  நல்ல பையன் உருவாகியிருந்தான். "ததோ யுத்த பரிஷ்ராந்தம்", "ஊர்த்துவ மூலம் அதஸ்ஸாகம்", "ஸ்ரீ பூர்ண போத குரு தீர்த்த பயோப்தி பாரா" என்று துவங்கும் பல துதிகள் தாத்தாவின் குரலில் மனனமாகியிருந்தன. மனதில் பலமான ஆன்மிக அஸ்திவாரம் இடப்பட்டிருந்தது. என்ன குட்டிக்கரணம் போட்டாலும் தடம் பிறழாமல் இருக்க இந்த அஸ்திவாரம் பேருதவியாக இருந்தது. பத்தாம் வகுப்பு முடிந்து  மேல்நிலையில் சேர்ந்திருந்த போது நண்பன் ஒருவன் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை காட்டினான்.  இயற்பியல் ஆய்வகத்தில் "Youngs Modulus"  பரிசோதனையில் கம்பி அறுப்பது. வேதியியல் ஆய்வகத்தில் டெஸ்ட் tube ஆட்டையா போடுவது, உயிரியல் ஆய்வகத்தில் அறுப்புக்கு வைத்திருந்த எலியை ஓவிய ஆசிரியையின் மேசையில் ஒளித்து வைத்தது என்று பல ஜாலங்கள் செய்து வந்த காலத்தில் "After SSLC what Next" என்பது போல இருந்த தொழிற்கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரம் மனதை கவர்ந்தது.


விண்ணப்பம் வாங்க பெங்களூர் வந்தேன். மாமா ராஜாஜி நகரில் இருந்து கூட வந்தார். அவருக்கும் இந்த தொழிற்கல்வி பற்றி அபிப்பிராயம் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தோம். Entrance Test எனப்படும் ஸம்ப்ரதாயத்துக்கு அழைப்பு வந்தது. தாத்தாவுக்கு ஒரே நிபந்தனை. "தேர்ச்சி பெற வேண்டும்". மற்றவை பிறகு. செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் இரண்டாவது மாடியில் தேர்வுகள் நடைபெற்றன. அந்த அழகான கல் கட்டிடம் சமீபத்தில் இடித்து தள்ளப்பட்டது மனதுக்கு சங்கடம். போட்டிக்குரிய தேர்வு என்று அது வரை சந்திக்காதது ஒரு மெல்லிய பயத்தை ஏற்படுத்தியது. டூ இண்டு டூ இண்டு டூ = டுட்டுடூ போன்ற சிரமமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 


குளிர் நடுக்கியதில் மூச்சா வந்தது. சுண்டு விரல் காட்டி அனுமதி கேட்டதற்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதியாக வேண்டும். மூச்சா போனதற்கு என்று எக்ஸ்ட்ரா நேரம் கொடுக்கப்பட மாட்டாது என்று கண்டிப்பாக கூறினர், இரண்டு  மாடி இறங்கி வந்து காரியத்தை முடித்த போது படம் வரைந்து பாகம் குறித்த கல்லூரி மாணவர்களின் கைங்கரியங்கள் கண்ணில் பட்டன.  கவர்ந்தது - "இதற்கு மேல் மூச்சா போனால் தீயணைப்பு படையில் சேரவும்" என்ற உயரத்தை குறிக்கும் கோட்டுடன் கூடிய குறிப்பு. 


இவையெல்லாம் தாண்டி வந்த போது ஒரு பொருளை சில மணித்துளிகள் காட்டிவிட்டு படம் வரைய சொன்னார்கள். எனக்கு வந்தது ஒரு spanner. படம் சுமாராக வரைந்திருந்தாலும் "Vanadium Steel" என்ற வார்த்தைகள் கண்ணில் பட்டது. அதை மட்டும் தெளிவாக எழுதி வைத்தேன். தேர்ந்தேடுக்கப் பட்டதற்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். நேர்முகத் தேர்வுக்கு மதியம் போல் அழைத்தார்கள்.   


பொது அறிவு என்பதற்கு ஒரு தனியாக கோனார் தமிழ் உரை போல புத்தகம் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பொழுது போக்குகள் என்ன என்ற கேள்விக்கு தபால் தலைகள் சேகரிப்பது என்றேன். ஜெர்மனியின் தபால் தலையில் என்ன எழுதியிருக்கும் என்று ஆரம்பித்து CTO என்றால் என்ன என்ற குடைந்தார். எல்லாம் முடிந்து ஊர் வந்து சேர்ந்தேன்.


பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்த எனது சகோதரி வந்தார். NTTFல் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்டதாக தந்தி வந்திருப்பதாக கூறினார்..  பிரியா விடை ஏதும் கூறியதாக நினைவில்லை. மூட்டை முடிச்சுடன் பெங்களூரு வந்து சேர்ந்தேன். பூணல் போடுவது என்ற ஸம்ப்ரமம் நடந்தேறாததால் சண்டாளனாகவே பெங்களூர் வந்தேன் .        


ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் அரசு பள்ளியில் படித்தவன் நான். படிப்பதிலிருந்த சுட்டித்தனம் ஆங்கிலம் பேசுவதில் இருக்கவில்லை. தமிழ் சினிமாவில் வரும் பால்மணம் மாறாத பாலகன் "விவேக்" போல சைடில் பால் கக்கிக்கொண்டே  #NTTF சேர்ந்தேன். 30 பேர் கொண்ட batchல் பலர் தமிழ் பேசியது வசதியாக போயிற்று என்றாலும் சரளமாக ஆங்கிலம் பேச வராதது ஒரு பலவீனமாகவே இருந்தது. பட்டணத்தில் படித்த சக மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசித்தள்ளினர். எஸ், நோ, ஓகே என்பதை தவிர மற்றவைகள் வாக்கியமாகி வாயில் வருவதற்குள் சம்பாஷணை முடிந்திருந்தது. Vocabularyஐ அதிகப்படுத்த ஒரே வழி novel படிப்பதுதான் என்று தீர்மானம் செய்து Nick Carter மற்றும் Carter Brown நாவல்களை தேர்ந்தேடுத்தேன். ஏன் இந்த இரண்டு கதாசிரியர்கள் என்ற கேள்வி எழுப்பும் நக்கீரர்கள் கூகிள் செய்து images பார்க்கவும். கூடவே James Hadley chase, Harold Robbinsம் உண்டு. சகட்டு மேனிக்கு படித்து தள்ளினேன். Stone For Danny Fisher இன்றும் மனதில் நிற்கிறது ... 


அப்படி இப்படியாக இரண்டு செமெஸ்டர் கழிந்தது. தட்டு தடுமாறி சமாளிக்க முடிந்தது. Irwing Wallaceகு தேறியிருந்தேன். வார இறுதியில் ஆங்கிலப் படங்கள் பார்த்ததும் உண்டு.  Subtitle போட்ட DVD எல்லாம் அப்போது கிடையாது.    கவனித்து கேட்டால் உண்டு இல்லையேல் விவேக்கும் விக்ரமும் ஆங்கிலப்படம் பார்த்தது மாதிரி.  


அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்கள் துணை நின்றனர். எனக்கு 3 வயது மட்டுமே மூத்த மாமாவும் இதில் சேர்த்தி. அவர்களுக்கு நான் ஒரு சின்ன பயல். இவனை ஏன் கெடுப்பானேன் என்ற நல்ல எண்ணம். தள்ளியே வைத்திருந்தனர். ஒரு நாள் போனால் போகிறது என்று ஒரு Joke சொன்னார்கள். சிரித்து வைத்துவிட்டு நான் ஒரு Joke சொல்லவா என்று கேட்டேன். அசைவம் .. அரண்டு போனார்கள். ஜோதியில் ஐக்கியமானேன்.  யாருக்காவது இந்த joke வேண்டுமென்றால் தொலை பேசியில் அழைக்கவும். சத்தம் போட்டு சிரித்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல ..


இன்னமும் வரும்...

Life Expectancy - Myth

சுதந்திரம் வாங்கின காலத்தில் நமது Life Expectancy 32 வருடங்களாக இருந்தது என்று கூகிளப்பன் சொல்கிறார். காகபுசுண்டர் பேர் சொன்னால் ஙே என்று விழிக்கும் நாம் கூகிளப்பன் சொன்னால் மட்டும் நம்புவோம். இதே 2012ல் 65 வருடங்களாக அதிகரித்து விட்டதாக செய்தி ..

இந்த முன்னேற்றத்திற்கு அல்லோபதி எனப்படும் மருத்துவமும், இங்கிலிஷ் மருந்துகளுமே காரணம். கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணையில் வைப்போம் ! எந்த வைத்தியராவது இன்று Diagnosis எனப்படும் ஆய்வுக்கு நோய் வாய்ப்பட்டவர்களை உள்ளாக்குகிறார்களா என்று பார்த்தால் கிடையாது. போனவுடன் இந்த மற்றும் அந்த பரிசோதனை ரிப்போர்ட் கொண்டுவா என்று ஆரம்பித்து நோண்டி நுங்கெடுத்து விடுகிறார்கள்.
இந்த மருத்துவ பரிசோதனை நிலையங்கள் எல்லாம் Kinder Garden school போல. எல்லாம் package மயம். நம்பர் 1 பரிசோதனை செய்தால் நம்பர் 2 பரிசோதனை இலவசம். Six Sigma தலையில் தீயை வைக்க ! நாம் உஷாராக இல்லா விட்டால் ஆண்களுக்கு நம்பர் 1 பரிசோதனை செய்து விட்டு, Congratulations ! நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று ஒரு சாக்லேட் கொடுத்து விடுவார்கள். எல்லாம் கத்து குட்டிகள். அவர்களும்தான் என்ன செய்வார்கள். போக வர எல்லா கார்பொரேட் நிறுவனங்களும் Free Annual Health Checkup என்று ஊழியர்களின் நலன் கருதி அறிவித்து விடுகிறார்கள். இதைத் தவிர Pre Employment Medical Check வேறு. நாம் இங்கே அங்கே பிராண்டி உண்டி உடைத்து Master Health Check போனால் கூட்டம் "கபாலி" படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போன மாதிரி இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றுடன் போனால் முட்ட முட்ட தண்ணீர் குடிக்க சொல்லிவிட்டு ஸ்கேன் செய்ய ஒரு gel தடவி அமுக்கும் போது படும் சிரமம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். தசாவதாரம் கிருஷ்ணவேணி பாட்டி பலராம் நாயுடுவிடம் சொன்னது மாதிரி ஆகி விடுமோ என்ற பயம் வேறு !
காலையில் போனால் மதியம் போல ஆகிவிடும். அதற்கப்புறம் பைரவா படமெல்லாம் பார்க்க போக முடியாது. அப்பேர்ப்பட்ட ஆயாசம். வீட்டிற்கு வந்து எதையும் சாப்பிடவும் முடியாது.. குமட்டும்..
முதலில் கை வைக்குமிடம் Sugar. நன்றாக இருப்பவனிடம் borderline sugar என்று சொல்லி பேதிக்கு கொடுப்பார்கள். கடந்த 20 வருடங்களில் இந்த சுகர் லெவல் எத்தனை முறை மாறி இருக்கிறது என்று பார்த்தால் புரியும் இவர்களின் புரட்டு. இவ்வளவு இருந்தால் நார்மல் என்று தீர்மானிப்பது WHO.. இந்த நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரென்று பார்த்தால் அத்தனை மருந்து கம்பெனிகளின் பிரதிநிதிகள். இவர்களே தீர்மானித்து இவர்களே மருந்து கொடுப்பார்கள்.
நம் பாட்டுக்கு சிவனே என்று பனங்கல்கண்டும், பாகு வெல்லமும் உபயோகப் படுத்தி கொண்டிருந்தவர்களிடம் அஸ்கா சக்கரை என்று அறிமுகப்படுத்தினார்கள். நமக்குதான் சுய அறிவே கிடையாதே. ஆங்கிலத்தில் எது படித்தாலும் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளைக்காரன் செய்த மூளைச் சலவை அப்படி.
மேலை நாட்டவரின் சாதுர்யம் அல்லது சூழ்ச்சியை பாராட்ட வேண்டும். அவர்கள் காட்டியது சக்கரை எனும் வெள்ளை காக்காய். குறி வைத்ததென்னவோ சக்கரை ஆலையில் வரும் கழிவான "Molasses". இந்த கழிவு ஒரு சல்லிசான விலைக்கு சாராய கம்பெனிக்கு விற்கப்படும். அதன்பின் பல லட்சம் லிட்டர் சாராயமாக காய்ச்சி குப்பியில் அடைத்தால் இருந்தே இருக்கு TASMAC. தெரியாமலா சொன்னார்கள் குடி மக்கள் என்று ! இந்த போதை கிறுகிறுப்பை உண்டாக்கி மக்களை அடிமையாக்கும். குற்ற உணர்வை இழக்க செய்து போதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டும். திருந்தலாம் என்று நினைப்பவனுக்காகவே "மச்சி, ஓபன் தி பாட்டில்" எனும் கருத்தாழம் மிக்க பாடல்.
சரக்கு முதலில் கல்லீரலை கரைத்து பின்னர் சிறுநீரகத்தில் தன் வேலையே காட்டும். போதாக் குறைக்கு மருத்துவ பரிசோதனையில் ஒரு consultant கேள்வி பதில் session நடத்துவார். மறக்காமல், "டூ யு ட்ரின்க்" என்று கேட்பார். ஹி ஹி என்று இளித்துக்கொண்டே "ஆம்" என்றும் சொல்லாமல் "இல்லை"
என்றும் சொல்லாமல் ஒரு மாதிரியாக தலை ஆட்டியதை அவர் பக்காவாக கட்டம் கட்டியிருப்பார். மூச்சா டெஸ்ட் ரிசல்ட் காட்டும் borderline positiveஐ பூதாகாரமாக்கி, தினமும் இந்த மாத்திரை சாப்பிடுங்கோ என்று பரிந்துரை செய்வார்கள். எத்தனை நாளுக்கு என்று கேட்டால், "ஆயுசு பரியந்தம்". Side effect என்பதைப் பற்றிய கவலையே கிடையாது. எந்த Rep அதிகம் கமிஷன் என்று சொன்னானோ அந்த மருந்துதான்.
இன்னமும் கிளறுவேன்...

Wednesday, December 03, 2025

Tirupati 2

 ஜெயிலர் படத்தில் வர்மனுக்கு வந்தது போல ஒரு ஆசை. பெரிய ஆசையெல்லாம் கிடையாது. சின்ன ஆசைதான். ஒரு முறையாவது மலையப்பனை சற்று அருகாமையில் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை.  


திருப்பதிக்கு லட்டு கொடுத்த வைபவத்திற்கு பின் ஐயனை வருடம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தரிசிப்பது வழக்கமாயிற்று. கோவிட் கைங்கர்யத்தில் 5 வருடம் அதில் துண்டு விழுந்தது. இந்த வருடம்  மார்ச் மாதத்தில் கல்யாண உற்சவத்திற்கு டிக்கெட் எடுத்து தரிசனம் ஈடேறியது. அப்போதுதான் Srivani Break Darshan பற்றி கேள்விப்பட்டேன். ஆசை யாரை விட்டது. அதுவும் நெருக்கித் தள்ளும் கூட்டமில்லாமல் ஐயனை தரிசிக்கலாமென்று கேள்விப்பட்டத்திலிருந்து அந்த ஆசை. பணத்தை கட்டுவது டிக்கெட் போடுவது எல்லாம் நல்லபடியாக நடந்தது.

அந்த நாள் நெருங்கும்போதுதான் மழை. அடைமழை. திருப்பதிக்கு ஆரஞ்சு Alert கொடுத்திருந்தார்கள். இதற்கெல்லாம் பயந்தால் எப்படியென்று எண்ணி திருப்பதிக்கும் வந்தாச்சு. ஒரு நாள் கையில் இருந்ததால் குடிமல்லம் பரசுராமேசுவரரை தரிசிக்க முடிவு செய்தோம். ஸ்வர்ணமுகி ஆற்றில் 60 வருடத்திற்கு ஒரு முறை பெருக்கெடுத்து சிவனை அணைத்து செல்லும் என்று படித்த ஞாபகம். 2005ல் இந்த நிகழ்வு என்றும் படித்திருந்தேன். அருகே செல்லும்போது பொழுது சாய்ந்திருந்தது. இருட்டு சூழத் தொடங்கி இருந்த நேரத்தில் ஓடையின் தரைப்பாலத்தில் முழங்கால் அளவு நீரோட்டம். கோவிலுக்குள் நுழைந்தவுடன் மழை கொட்டியது. மெதுவாக அந்த ஓடையை தாண்டி திரும்ப வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் அம்மாவுக்கு முதல் attendance போடுவோமென்று போனால் மறுபடியும்  சரியான மழை. ஏறக்குறைய நீந்திக்கொண்டே தரிசனம் செய்தோம். பக்கத்திலுள்ள அண்ணன் கோவிந்தராஜனையும் தரிசித்தோம். கிருமி கண்ட சோழன் மஹாத்மீயம் பற்றி கோவில் பிரகாரத்திலும் இணையத்திலும் படித்து தெரிந்து கொண்டோம். சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜனை பிச்சாவரத்திற்கு அருகே கடலில் கரைத்ததை தசாவதாரத்தில் ஆண்டவர் கோடிட்டு காட்டி இருந்தார்.

போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் உடையவர் ஏகப்பட்ட வேலை செய்திருக்கிறார். கில்லாடிதான் ! பார்த்தசாரதி பெருமாள் கொடுத்த இடத்தில் அண்ணன் கோவிந்தராஜன் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். தம்பி மலையப்பன் கல்யாணத்திற்கு குபேரனிடம் பெற்ற கடன் சம்பந்தமாக கணக்கு வழக்கு அண்ணன்தான் கவனிப்பதாகவும் ஐதீகம். பெருமாள் என்றாலே "ஜெருகண்டி"தான் போலும். கூட்டமில்லாத கோவிலில் நிதானமாக சேவிக்கலாமென்று பார்த்தால் அதற்கு வழியில்லை. அடித்து துரத்தி விட்டார்கள். ஸ்ரீரங்கத்தில் பெருமாளை பூச்சாண்டி சேவையில் தரிசித்தது கூட சுலபமாக இருந்தது.

ஒரு வழியாக மலைக்கு வந்து சேர்ந்தால் கண்மண் தெரியாத மழை, நந்தகத்தில் ஜாகை என்று தெரிந்துகொண்டு அங்கே வந்தால் நச நசவென்று ஈரம். பெரிய ரூம், சம்பந்தமில்லாத பெரிய கட்டில் மற்றும் ஒரு சின்ன கட்டில். ரெண்டு சோஃபா, வழுக்கும் குளியலறை. ரெண்டு commode (Indian & Western). Geycer வேலை செய்தது. Lobbyல் க்ரானைட் போட்டு இழைத்திருந்தார்கள். Water Purifierல் இருந்து ஒழுகிய தண்ணீர் வழியில்லை. மட்டமான பிளம்பிங் போலும். எங்கு பார்த்தாலும் சுவர் உப்பியிருந்தது.  சிப்பந்திகள் சில்லறையில் மட்டுமே  குறியாக இருந்தார்கள். Sarangee வரை செல்ல திராணியில்லாததால் பக்கத்தில் இருந்த கையேந்தி பவனில் இரவு சாப்பாடு.

காலையில் 10.15க்கு வரவேண்டும் என்று டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். யாரோ சொன்னதை நம்பி பயோமெட்ரிக் counterக்கு சென்றோம். ஒரே மழையப்பன். இங்கெல்லாம் பருப்பு வேகாது, Supadham வெல்லண்டி என்று செப்பினார்கள். கொட்டும் மழையில் படியேறி அங்கே போனால் VQC 1 வெல்லச் செப்பினார்கள். அங்கே வெல்லினால் பக்கம் வரை காரில் வந்திருக்கலாம் என்று தெரிந்தது. பெருமாள் வச்சு செய்வது என்று தீர்மானித்த பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இடையில் பிரசவ வைராக்கியம் வேறு. இதற்கு மேல் இங்கு வருவதில்லை என்று. அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ நட ... என்று ஒரு mind voice கேட்டது. உள்ளே ஊரி(றி)க்கொண்டு போனால் மஹாதுவாரத்தில் நிறுத்தி எங்கே வந்தாய் என்று கேள்வி. Sreevani darshan என்று சொன்னால் Free Darshanஆ என்று கேட்டார்கள். அதற்குள் ஒருவர் உள்ளே அனுப்பச்சொல்லி கயிற்றை தூக்கிவிட்டார். வாழ்நாளில் Vendi Vaakilai தள்ளுமுள்ளு இல்லாமல் தாண்டியதே இல்லை. நெருக்கும் கூட்டத்தில் முழி பிதுங்கி கால்கள் இரண்டும் அந்தரத்தில் இருக்க அப்படியே நசுக்கி Bangaru Vaakilu வரை கொண்டு செல்வார்கள்.இந்த முறை நாங்களாக நடந்து சென்றோம். Queueவை விலக்கி வலது பக்கமாக போக சொன்னார்கள். அப்படியே சென்று எப்பொழுதும் ஜெருகண்டி சொல்லும் இடத்தில் மறுபடி ஐக்கியமானோம். இன்னும் இரண்டு வாசல்களை தாண்டி பெருமாள் முன்னே இரண்டு நொடி நிற்க முடிந்தது. 

எந்த கோரிக்கையும் நினைவுக்கு வரவில்லை. கண் சிமிட்ட மனமில்லை. வெளியே வந்ததற்கு அப்புறம் Calendaril பார்த்த பெருமாள் மட்டுமே நினைவில் வந்தது. உண்டியலை பார்த்தவுடன் லட்டு வாங்க கொடுத்த சீட்டை பெருமாள் பிடிங்கிய ஞாபகம் வந்தது ....

மீண்டும் அழை மலையப்பனே !
    
   


Vande Bharat

 வந்தே(ன்) பாரத், நொந்தே(ன்) பாரத் ...


பிரதமர் பொங்கு பொங்கென்று பொங்குகிறாரே .. அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்க்க ஒரு பிரயாணம்.

முன்பு Shatabdi என்று திரிந்து கொண்டிருந்த இரயிலின் பயண நேரத்தை பட்டி பார்த்து டிங்கரிங் செய்து பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.  

குற்றம் கூறுவதற்கு முன்பு ஒரு நல்ல observation. ரயில் வண்டிகள் புதியவை என்பதால் சுத்தமாக இருக்கின்றன. கழிவறைகள் பளிச்சென்று இருக்கின்றன.
பாராட்ட வேண்டிய மற்றொரு விஷயம் ஜெனரல் கோச் கிடையாது.

நாடு சுபிட்சமாக இருப்பதாக ஊறுகாய் மாமி பறை சாற்றுவது உண்மையாக இருப்பதாலோ அல்லது மக்கள் செலவு செய்ய அஞ்சாததாலோ தெரியவில்லை .. கம்பார்ட்மெண்ட் நிறைந்திருந்தது.  பயணம் செய்பவர்கள் இதற்கு முன்பு பிருந்தாவன், எக்ஸ்பிரஸ் போன்ற தினசரி ரயில்களில் 2nd sittingல் சென்றவர்களே.
ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கும் இரயிலை போட்டோ எடுத்துக்கொண்டிருந்த வாலிபன் கையிலிருந்த போன் நழுவி தாண்டவளத்தினிடையே விழுந்தது.
எப்படியாவது கீழே இறங்கி எடுக்கவேண்டுமென்று முயற்சித்த அன்பரை ரயில்வே ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.   
நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. போட்டோ எடுத்து முகநூலில் போடாமலே இருந்தாலும் பிரயாணிக்கலாமென்று.

சில தொல்லைகளிலிருந்து இன்னமும் விடுதலை கிட்டவில்லை .. 

கைபேசியில் உரக்கப் பேசும் சீமான்கள் மற்றும் சீமாட்டிகள். 
மகள் சான் பிரான்சிஸ்கோவிலிருப்பது ஊரெல்லாம் பறை சாற்றும் மாமி. 
பக்கா தயிர் சாதமாக இருந்தாலும் ஹிந்தியில் பாத்து பாத்தென்று பாத்தும் மாமாக்கள். 
Work From Home கொடுமையினால் அலுவலக callகளை அம்பானி புண்ணியத்தில் ரயிலில் எடுக்கும் வாலிப, வாலிபிகள். 
Headphone போட்டு தொலைந்தால் office கொடுமைகள் மற்றவர்கள் சகித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. 
NDA எனும் வில்லங்கம் இருந்தாலும் கவலைப்படாமல் பயண நேரத்தை உபயோகமாக கழிக்கும் நவநாகரிக கொத்தடிமைகள்.
புதிதாக வாங்கிய iPadஐ திருட்டுத்தனமாக தரவிறக்கம் செய்த சினிமா பார்க்க மட்டுமே பயன்படுத்தும் விடலைகள். 

நிறுத்தம் வரும்போது தகுந்த அறிவிப்புகள். ஆனாலும் நாமக்கல்லை "நமக்கல்" என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது.
யாரோ புண்ணியவான் கொடுத்த feedback போலும். அடுத்த முறை சரியாக கூவியது.   
தானியங்கி கதவுகள், சாய வேண்டாம் என்று பாதுகாப்பு  அறிவிப்பு.
என்னதான் வந்தே பாரத்தாக இருந்தாலும் ஓடும் தண்டவாளம் அதே பழைய பேரிச்சம் பழம்தானே.
சில நிமிடங்கள் வேகமெடுத்தாலும் அப்புறம் சாதாரண வேகம்தான்.
வந்தே பாரத் மோதி மாடு பரிதாபமாக சாவு என்று செய்தித்தாளில் தலைப்பு சேதி.
இரயில் ஓடும் தண்டவாளத்தில் மாட்டை மேய விட்ட மர மண்டையை என்ன செய்ய ?
இதில் இரயிலின் முன் பாகம் சேதமடைந்ததை படமெடுத்து ஏளனம் வேறு ..
மாடு மேல் வண்டியேற்றி பரிசோதனை செய்துதான் இனிமேல் வெள்ளோட்டம் விடவேண்டும் போலும்.
என்னதான் "Make In India" பீத்திக்கொண்டாலும் உள்ளே இருந்த பல விஷயங்கள் "இறக்குமதி"தான்.

சாப்பாட்டு கொடுமைக்கு வருவோம். இதற்குமுன் Shatabdiல் கிண்டிய அதே உப்புமாதான்.
நாகேஷ் கிழித்து சாப்பிடும் அப்பளம் பற்றி பேசியிருப்பார், இங்கு உரித்து சாப்பிடும் இட்லி. உறைந்து போன பொங்கல்.
சாம்பார் என்ற பெயரில் பருப்பு தண்ணீர். சில நேரங்களில் கடலை மிட்டாய், சில நேரங்களில் Millet உருண்டை
தவிட்டு பிஸ்கெட். வெந்நீரில் கரைத்து குடிக்கும் தேநீர் அல்லது காபி.
கூட வந்தது நாக்கு செத்த கும்பல் போலும். இந்த திராபையை ஆஹா ஓஹோ என்று சிலாகித்து ஊரில் இருக்கும் உறவுகளுக்கு கைபேசியில் commentary.

பரிமாறும் சிப்பந்திகள் எல்லாரும் வடக்கன்ஸ் only.
தமிழ் நாட்டில் அல்லது கர்நாடகத்தில் இருந்து தமிழ் நாடு வழியாக கேரளம் செல்லும் இரயிலில் தெக்கன் எவனும் இல்லை.
ஒரு மாமா டிக்கெட் போடும் போது வீராப்பாக சாப்பாடு வேண்டாமென்றுவிட்டு வண்டியேறிய பிறகு தான் diabetic என்பது நினைவுக்கு வந்தது போலும்.
தமிழ் தெரியாத "அவனி"டம் வம்பு. அவன் போடா கூந்தல் என்று போய் விட்டான். இவர் பாட்டுக்கு கூப்பாடு. ரத்த கொதிப்பும் உண்டு போலும்.

ஒரு காலேஜில் உபன்யாசம் செய்து முடித்து விட்டு ஒரு வழியாக சென்ற வேலை முடிந்து அடுத்த வந்தே பாரத்தில் திரும்பினோம்
கையில் கொஞ்சம் மூட்டை இருந்ததால் வண்டியேற்றி விட சகாயத்திற்கு இரண்டு உபாத்யாயர்களை அனுப்பி இருந்தார்கள்.
சரியான நேரத்திற்கு இரயில் வந்தது. ஏற்றி விட வந்த அன்பர்கள் சீட் வரை வந்து மூட்டையை மேலே ஏற்றும் நேரத்திற்கு வண்டி கிளம்ப அலாரம் அடித்தது.
அன்பர்கள் தள்ளு முள்ளுவை தாண்டி வாயிலுக்கு செல்லும்போது வண்டி கிளம்பியாச்சு. அடுத்த ஸ்டேஷன் சேலம். ஒரு மணி நேர டிக்கெட்டில்லா பயணம்.

சேலம் வந்தவுடன் திரும்பவும் "போய்ட்டு வரோம்" என்று சொல்ல சீட் வரை வந்து மறுபடியும் கதவு மோதிக்கொள்ளுமோ என்ற பயம்.
நல்ல வேளைக்கு அங்கிருந்தே இறங்கி பிளாட்பாரத்திலிருந்து "டாடா" காண்பித்தார்கள். 

மடியில் வேறு யாரும் உட்காரவில்லை. ஜம்போ மாமிகள் யாரும் நெருக்கி தள்ளவில்லை.
நிறுத்தங்கள் குறைவு. சுமார் மூஞ்சி குமார் சாப்பாடு. சுத்தமான கழிப்பறை.
மற்றபடி பிரமாதம் என்று சொல்ல ஒன்றுமில்லை ..  

Monday, November 28, 2016

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 5

"அத்தனைக்கும் ஆசைப்படு" என்றார் ஒரு உணர்ந்தவர். அவர் உணர்ந்தவரா இல்லையா என்ற தர்க்கம் பிறகு வைத்துக்கொள்ளலாம். 

ஆசை, பேராசை, வெறி, அதுக்கும் மேல .. 

ஆமாம்... ஒரு நேரத்திலே ஒரு தட்டுலேதான் சாப்பிட முடியும், ஒரு வட்டிலிலே தான் குடிக்க முடியும், ஒரு படுக்கையிலதான் படுக்க முடியும், ஒரு துணியைத்தான் உடுக்க முடியும்.. ஒரு துவாரத்தைத்தான் புணர முடியும். தொண்டைக்குழிக்கு கீழே போனதுக்கு அப்புறம் கம்பங்களியம், caviarம் ஒண்ணுதான்.. சுண்டக்கஞ்சியும், sakeயும் ஒண்ணுதான், வெளியேறும் போது வித்தியாசமே கிடையாது.. மல ஜலமாகத்தான் வெளியேறுகிறது..   எதற்கு இந்த மித மிஞ்சிய வெறி ..

"வரும்போதும் ஒண்ணும்  கொண்டு வரல .. போகும்போதும் ஒண்ணும்  கொண்டு போக முடியாது" என்கிற தலைவரின் சினிமா வசனத்திற்கு உச்சு கொட்டிய மக்கள் தனக்கு என்று வரும்போது சினிமா வேறு, நடைமுறை வேறு என்றார்கள். 

சேர்த்தவன் யாராவது நிம்மதியா இருக்கானான்னு பார்த்த .. இல்லே .. உடம்புலே ஈ மொய்க்குது. சேர்த்து வச்சதை வேலைக்காரன் சாப்பிடறான்..  மாற்றான் மனைவியை புணர்ந்தவனின் மனைவியை வேற்றான் புணர்கிறான். அடுத்த சந்ததி நெறியில்லாமல் வளர்கிறது. பிள்ளைகள் தெறி கெட்டு ஓடுகிறார்கள். மேலே போவது கீழே வரத்தான் செய்கிறது.

Charity begins at home என்றார்கள். இந்த சம்பவம் நடந்த மறுநாள் பேதலித்து வந்த பணிப்பெண்கள் இருவரையும் பயப்பட வேண்டியது நாம் அல்ல என்று விளக்கி, சில நாட்களுக்கு தேவையான சில்லறையை கொடுத்து அனுப்பினோம். வங்கிக்கோ தபால் ஆபீஸுக்கோ உடனடியாக சென்று மிதி படவேண்டாம் என்றும் சொன்னோம். சில்லரை எங்கிருந்து வந்தது ? சில வருடங்களுக்கு முன் பையனுக்கு பூணல் போட்ட போது நண்பரகளும், சொந்தங்களும் கொடுத்த சலவைத்தாள்கள் மனைவியின் கருப்பு பண முடிச்சிலிருந்தது. அடுத்த சில நாட்களுக்கு வீட்டுக்கு வந்த காய்கறிக்காரர்களும், இஸ்திரி அம்மாவுக்கும் சலவைத்தாள் சப்ளை ஈடேறியது.

கூட்டம் ஓய்ந்திருக்கும் என்று ஒரு சனிக்கிழமை வங்கிக்கு சென்றேன். கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. வன் புணரப்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களில் புகை குறைந்திருந்தது. வங்கி ஊழியரின் முகத்தில் அயர்ச்சி தென்பட்டது. சந்தடி சாக்கில் சிக்கிய extra 2000 நோட்டை திருப்பி தராமல் போன புதிய கருப்பு பண முதலையை பற்றி அங்கலாய்த்த அம்மணியை வருத்தத்துடன் மட்டுமே பார்க்க முடிந்தது. செக்கை கொடுத்து பணம் வாங்கினேன். வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றார்கள் ..  அவ்வளவு செலவு ஏது? இருந்தால்தானே எடுப்பதற்கு ! உள்நாட்டு செலாவணிக்கே வழி இல்லாம திருடிக்கிட்டிருக்கோம், அயல் நாட்டு செலவாணிக்கு எங்கே போவது என்ற கௌண்டமணியின் வசனம் நினைவுக்கு வந்தது.

பக்கத்துக்கு வீட்டு பணிப்பெண் சீட்டு போட்டு சேமித்த பணம் மொத்தமாக வந்து மாட்டியிருந்தது, வங்கிக்கணக்கு சொந்த ஊரில்! ஆதார் அட்டை சொந்த ஊரில்.. பணம் செலுத்தும் இயந்திரம் வேலை செய்யாது என்ற அறிவிப்பு வேறு! பேந்த பேந்த முழித்தவளை, பதட்ட படவேண்டாம் என்று கூறி அமைதிப்படுத்தினோம்.  பையனையும் பெண்ணையும் வங்கிக்கு அனுப்பி டெபாசிட் செய்ய சொல்லி, தேவைப்பட்ட போது எடுத்து தருகிறோம் என்றபின் ஓய்ந்தது. அப்படியே யாராவது பணம் மாற்றித்தர வரிசையில் நிற்க கூப்பிட்டால் போய் வெய்யிலில் வேக வேண்டாம் என்ற அறிவுரை வேறு. வங்கிக்கு சென்ற என் மகள் ஒரு கூடை Perk சாக்லேட் வாங்கி அங்கிருந்த பணியாளருக்கு வினியோகம் செய்து நன்றி தெரிவித்தாள்.

எல்லாம் ஓய்ந்தது என்று சாயும் போதுதான் அடுத்த வாரம் மாதத்தின் முதல் வாரம் என்று நினைவுக்கு வந்தது. 

Back to square one for the salaried class.
    
கதை முடிக்கும் முன்பு நினைவுக்கு வருவது கௌண்டமணியின் ஒலிக்கீற்று. "என்கிட்டே இனிமேல காசு இல்லேடா ! என்ன விடுங்கடா !!"  

வயிற்றெரிச்சல் படலம் முற்றிற்று !

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 4

இது நாள் வரை எதிரும் புதிருமாய் இருந்த கட்சிகளெல்லாம் "பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க" ஒன்று கூடினர். மகிழ்ச்சி ! ஆளும்கட்சியினர் இஞ்சி தின்ற குரங்கு போலாயினர். ஆங்கிலத்தில் Catch 22 என்பர். Damned if you do and damned if  you dont. There are no virgins in a maternity ward.. you know.  அரசியல் அரிசியல் ஆனது.  

அரசியல்வாதிகள் கல்வி நிறுவனங்களை அமைத்த போதே அதன் பின்னணி தெரியாதா.. பணம் ஒன்றே குறி. காசு கொடுத்து பட்டம் வாங்கியதால் விளைந்த விபரீதத்திற்கு மௌலிவாக்கம் ஒன்றே போதும். 

சினிமா நடிகர்கள் விதி விலக்கல்ல. "சத்தியமேவ ஜயதே" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த பெருமகன் இப்போது எங்கே ? பாலிவுட்டின் முதல் குடும்பம் எங்கே ? மற்ற தென்னிந்திய நடிகர்கள் எங்கே ?      

பேசா மடந்தை என்று புகழ் பெற்ற முன்னாள் பிரதமர் பேசினார். அது சரி .. உழும் காலத்தில் உறங்கிவிட்டு அறுவடை காலத்தில் புலம்பியது போல ..எல்லாம் சரி .. அவர்கள் ஆண்ட போது பெரும்பாலான கிராமங்களில் வங்கிகளோ, ATM களோ இல்லை என்பது தெரியாதா ? இப்போதுதான் தெரிய வருவது போல தாக்கி தள்ளி விட்டார்கள்.  விதண்டாவாதி என்று பெயர் பெற்ற Arnab முதல் முறையாக தெளிவுடன் பேசிய போது ஆளுங்கட்சியின் கைப்பாவை என்றாகியது. மற்ற தொலைக்காட்சிகள் மட்டும் என்ன நடு நிலையா ? 

எதிர் கட்சியில் இரண்டு முன்னாள் நிதி அமைச்சர்கள், ஜனாதிபதியே ஒரு முன்னாள் நிதி அமைச்சர். ஆளுங்கட்சியில் ஒருவர் என்று.. இதை விட நல்ல வியூகம் வேறு எப்போது கிடைக்கும். ஆக்கமுள்ள விவாதம் நடைபெறும் என்று பார்த்தால் குழாயடி சண்டையாக்கி விட்டீர்களே. பேப்பரை எறிந்து, கூச்சலிட்டு .. அடுத்த தலைமுறைக்கு உங்கள் நடத்தை  முன் உதாரணமல்லவா..  

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்று நாடு தழுவிய பந்த் வருகிற 28ம் தேதியன்று என்று கூவல். கூலிப்படைக்கு கொடுக்க வேண்டிய குவார்ட்டரும், கோழி பிரியாணி பொட்டலமும் சும்மா வருமா பாஸ் ?  உடனடியாக பல்டி .. மூன்று நாட்களில் வாபஸ் .. இல்லையேல் பின் விளைவுகள் .. 3 நாள் ஆச்சு பாஸ் .. 

ஊரை அடித்து உலையில் போட்டது போல கிங் பிஷர் சீமானின் கடன் தள்ளுபடி. யார் பணம் ? யார் தள்ளுபடி செய்வது ? விவசாயக்கடன் வாங்கியவனை தற்கொலைக்கு தள்ளி விட்டு, தண்ணி வண்டி ஒட்டிய பெருமானுக்கு விடுதலை. ஜப்தி செய்த சொத்துகள் ஏலம் விடப்பட்டனவா என்றால் .. இல்லை .. கல்விக்கடன் கட்ட முடியாத தந்தைக்கு இழிவு .. 

All animals are equal .. Some animals are more equal ..
  

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 3

சுங்கச் சாவடியில் 500 ரூபாய் நோட்டை நீட்டி சில்லரை கேட்டவர்களுக்கு நாணயமான மூட்டை கிடைத்தது, நெரிசல் தாங்காமல் சுங்கம் தவிர்த்தது அரசு ..

23 ATM சென்று பணம் எடுக்க முயன்ற கஜினி முஹம்மதுவின் வீடியோ தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டது. இதுவே அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊடகங்களில் replay செய்யப்பட்டது. அலுவலகம் செல்ல இருப்பதிலேயே அதிக தூரம் என்று சொல்லப்படும் வழியை கடந்த ஒரு வாரமாக நான் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். வழியில் உள்ள வங்கிகளையும் ATMகளையும் கடந்து சென்றால் நிலவரம் என்ன என்று தெரியும் அல்லவா. முதல் ஒரு வாரம் ரேஷன் கடையில் சர்க்கரை போட்டது போல் இருந்தது. பிறகு மெதுவாக பிசு பிசுக்க ஆரம்பித்தது. ஐந்தில் இரண்டு ATMகள் 2000 ரூபாய் கக்கிக்கொண்டுதான் இருந்தது. வெளியில் அறிவிப்பும் இருந்தது. 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பரவலாக இருந்தது என்னவோ உண்மை.  

கருப்பு பணம் இருப்பவன் எவனும் வரிசையில் நிற்கவில்லையே என்ற கேள்வி வேறு.. அவ்வளவு பணத்தையெல்லாம் வச்சுக்கிட்டு வரிசையில் நிற்க முடியாது பாஸ். இதெல்லாம் போதாதென்று பப்பு 4000 ரூபாய் பெற்றுக்கொள்ள வாங்கி செல்வதாக ஒரு photo ops ஈடேற்றினார். அன்னாரின் சிக்கனத்தை மெச்சி "சிக்கன சிகாமணி" என்று பட்டம் வழங்குவோமா ?

பிரதமரின் தாயார் வரிசையில் நின்று நோட்டு மாற்றினார் என்று ஒரு பக்க propaganda. இன்னொரு பக்கம் அவ்வளவு வயதான அம்மையாரை வரிசையில் நிறுத்திய கொடூரன் என்ற விமர்சனம் இன்னொரு பக்கம். முன்னால் போனால் முட்டுவதும் பின்னால் போனால் உதைப்பதும் நாம் பார்த்து பழகியதுதானே ..     

2000 ரூபாய் நோட்டை தண்ணீரில் முக்கினால் கலர் போகுமா போகாதா என்ற ஆராய்ச்சிக் காணொளி வைரலாக பரவியது. இது என்ன வியாதி என்று தெரியவில்லை. பணம் கிடைக்கவில்லை என்று ஒரு பக்கம் ஒப்பாரி.. இன்னொரு பக்கம் தேவநகரி உபயோகப்படுத்தப்பட்டது தவறு என்று வழக்கு, வியாஜ்யம். தாய் மொழி மறந்து ஆங்கிலத்தில் புரண்டு கொண்டிருக்கும் கான்வென்ட் படிப்பாளிகள் திடீரென இரண்டு ஆயிரம் என்று 3 மொழிகளில் தவறாக பதிக்க பட்டிருக்கிறது என்று கூறி நக்கீரர்களானார்கள்.

Misprint என்று கூறப்படும் நோட்டுகள் ebay எனப்படும் விற்பனை தளத்தில் கொள்ளை விலை கொடுத்து வாங்கும் அதே மக்கள் பிழை உள்ள நோட்டுக்களை போட்டோ பிடித்து ஊடகங்களில் போட்டு தள்ளினர். நோட்டு அச்சடிக்கும் இடத்தில வேலை செய்பபவனும் மனிதன்தானே என்று விட்டு வைக்கவில்லை. இந்த மாபெரும் அறிவுப்பு வெளி வருவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே 2000 ரூபாயின் மின் பிம்பங்கள் வாட்சப்பில் பரவியது. வயிற்றுப்போக்குக்கு மாத்திரை கொடுப்பது போல நானோ GPS புரளி. 

இல்லை ..ஆனால் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தசாவதாரம் வசனம் வேறு.. 

அறிவிப்பு வெளி வந்த நாள் முதலாக இறந்தவர் அனைவரும் வரிசையில் நின்று இருந்ததாகவே கணக்கு எழுதப்பட்டது.  தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்து பேச சொன்னது போலவே பொது மக்கள் பேசினார். அடிக்கடி கேமெராவை பார்த்து, "என்ன, நான் சரியா பேசுறேனா ?" என்று சாடையில் கேட்பது வேடிக்கையாக இருந்தது. தமிழில் பார்டர் மார்க் வாங்கி பாஸ் செய்த மக்களெல்லாம் செந்தமிழ் பேசும்போதே தெரியாதா ? எழுதிக்கொடுத்து படிக்கிறாரகள் என்று..    

தராதரம் இன்றி பிரதமரை தொலைக்காட்சியில் வைதவர்கள் சிலர். சு. சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது முன் வரிசையில் அமர்ந்து பிறப்புறுப்பை காட்டிய கண்ணியமான மாந்தரவல்லவா நாம்..   

திருமணங்களுக்கு இரண்டரை இலட்சம் வரை வங்கிகளில் பணம் எடுக்கலாம் என்று சொன்னவுடன் போலி வரவேற்ப்பிதழ்கள் நீட்டப்பட்டன. 

எது எப்படியோ MEME எனப்படும் சிரிப்பு சித்திரங்கள் மக்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தின. "இடுக்கண் வருங்கால் நகுக" என்று படித்தவர்களல்லவா நாம்..யாரையும் விட்டு வைக்கவில்லை.   

IIT Kharagpur எனும் மாபெரும் கல்வி நிறுவனத்தின் மேலிருந்த மரியாதை தரை மட்டமாகியது. முதல்வன் திரைப்படத்தில் வந்தது போல அவதார புருஷன் கிடைத்தான் என்று நினைத்த தில்லிவாசிகள் மண் கவ்வினர். IRS என்ற அரசு எந்திரத்தின் மேலான பெரு மதிப்பும் மண்ணாகியது. இதற்கு படிக்காத அரசியல்வாதியே மேல் என்ற வெறுப்பு எஞ்சுகிறது. 

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 2

4000 மாற்றி தந்தால் 500 ரூபாய் கைக்காசு என்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வங்கிகளை நோக்கி படையெடுத்த புலிகேசிகள் ஏராளம். காலையில் ஓட்டுநர் உரிமம், மதியம் வாக்காளர் அடையாள அட்டை, சாயங்காலம் ஆதார் அட்டை என்று மாறி மாறி "உழைத்து" வங்கி பணியாளர்களின் உயிரை வாங்கினர். விரலுக்கு மை என்றவுடன் எப்படியோ அனைவரிடமும் புதிய நோட்டுக்களோ, சில்லறையோ இருந்தது.  

வரிசை நீண்ட இடங்களில் நல்ல உள்ளங்களும் இருந்தன.  தவித்த வாய்க்கு தண்ணீர், தேநீர் தருவதிலிருந்து, ATM செல்பவர்க்கு சவாரி இலவசம் என்று சொன்ன  ரிக்க்ஷாகாரர்கள், மற்றும் உங்களிடம் சில்லரை வரும் போது பணம் கொடுக்கலாம் என்று சொன்ன சில்லறைக் கடைகள்.. அநேகம். 

காய் கறி விற்பவர்களிடம் 500 தாளை நீட்டி சில்லறை எதிர் பார்த்தவர் சிலரே. மிகப்பலர் உண்டியை உடைத்து இருந்த சில்லரையை பீராய்ந்து, இன்னும் ஒரு வாரத்துக்கு போதும் என்று பதறாமல் இருந்தவர்களே. 

ஆயினும் பதற்றம் யாரையும் விட்டு வைக்கவில்லை.

பெரிசுகள் சில முந்தியத்துக்கொண்டு வங்கிகளை நோக்கி படையெடுத்தன. வங்கி ஊழியர்கள் அவர் வாழ் நாளில் காணாத கூட்டத்தை கண்டனர். இனிமேல் யாரும் தலைவர் படம் முதல் நாள் முதல் ஷோ போல என்று சொல்லவே முடியாது. தபால் நிலையம் என்று ஒன்று இருப்பதே இந்த ஈமெயில் சமுதாயத்துக்கு இப்போதுதான் தெரிய வந்தது.   
      
கணக்கு திறந்த நாள் முதலாக zero balance காட்டிய ஜன் தன் கணக்குகள் அனைத்திலும் சரியாக 49000 மட்டுமே செலுத்தபட்டிருந்தன. 

வானம் பார்த்த பூமி .. வெள்ளாமையே இல்லே என்று உதட்டை பிதுக்கிய விவசாயிகளின் வங்கி கணக்குகளில் எப்படியோ கடந்த இரண்டு வாரங்களில் நல்ல மகசூல். 

மறந்து போன பல சொந்தங்கள் இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அரசு பான் அட்டைக்கு விண்ணப்பம் போட சொன்னது  மழுங்கிய மண்டைகளில் திடீரென உரைத்தது. பான் அட்டையும் வங்கி கணக்கும் இருந்த குடும்பத்தினர் அனைவரும் ஓவர் நைட் லட்சாதிபதி ஆனார்கள் (சரியாக 2.5 லட்சம் மட்டுமே).

மொட்டை தொலை பேசி அழைப்புகள் ஏராளம். உங்களிடம் கருப்பு பணம் இருந்தால் 30% கமிஷனுக்கு மாற்றி தருகிறோம் என்று. ஐயா இல்லை என்று சொன்னால், நீங்கள் ஓகே என்று சொன்னால் உங்கள் அக்கௌன்ட்டில் கொஞ்சம் பணம் போட முடியுமா ? ஒரு சில மாதங்களில் திரும்ப எடுத்து விடலாம் .. என்பது போல ... 

மழை நீர் செல்வதற்காக  உருவாக்கப்பட்ட வடிகால்களில் 500 மற்றும் 1000 நோட்டுகள் மிதந்தன... சில பல இடங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டது என்று புரளி கிளப்பினார்கள். கள்ள நோட்டாக இருந்திருக்க வேண்டும். 

வங்கி ஊழியர்களில் சிலர் தங்கள் ஊழ்வினைப் பயனை நொந்து கொண்டு பணியாற்றினர். நாட்றம்பள்ளியில் வங்கி மேளாலரின் சமஸ்க்ரித பாண்டித்யம் வெளிப்பட்டது. வீட்டில்  காலை உணவு உப்புமாவா.. பொங்கலா என்று தெரியவில்லை ..கெட்ட வார்த்தை பேசுவது உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா ? நாங்களும் பேசுவோமில்லே என்று விளாசி தள்ளினார். வீட்டில் காலை உணவு உப்புமாவா.. பொங்கலா என்று தெரியவில்லை .. அதையும் வீடியோ பிடித்து ஊடகத்தில் போட்டனர். எதற்கு லைக் போடுவது என்று விவஸ்தை இல்லாமல் எல்லாத்துக்கும் போட்டு தள்ளினர். வங்கி சேவகர்களின் சீரிய பணியை மெச்சி பூக்கொத்து அளித்த காணொளியும் இதில் சேர்த்தி...

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 1கருப்பு பணம் ஒழியாதா.. விடிவு காலம் பிறக்காதா ? என்று அனைவரும் ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தை ப்ளாக்க்கில் டிக்கெட் வாங்கி பார்த்துவிட்டு கனா கண்டு கொண்டிருந்தனர். படத்தில் வரும் பல காட்சிகளுக்கு கை தட்டி மாய்ந்தனர். அந்நியன் படமும் இதில் சேர்த்தி.  பிச்சைக்காரன் திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஐடியா என்று வாய் பிளந்தனர். சூப்பர் எனும் கன்னட திரைப்படமும் கருப்பு பணம் ஒழிந்து இந்தியா பிரகாசிப்பதாக ஒரு பிரமையை உருவாக்கியது. இந்த மாதிரி ஏதும் நடந்து இந்த நாடு சுபிட்சம் அடையாதா என்று அங்கலாய்த்தனர்.  

அடித்தான் ஒரு நாளிரவு ஆப்பு..


அன்று வரை யாரவது ஒரு மாற்றத்தை கொண்டு வர மாட்டார்களா என்று திண்ணை கச்சேரி செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் பொருளாதார நிபுணர்களானார்கள். அரசியல் என்றால் காத தூரம் ஓடியவர்களெல்லாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தனர். சில பெரிசுகள், 1978'ல் என்ன ஆச்சு தெரியுமா ? 5000. 10000 நோட்டெல்லாம் திருப்பதி உண்டியல்லே போட்டுட்டாங்க என்று பழைய பஞ்சாங்கத்தை புரட்டினர்.

ஏழை மக்கள் உறங்கினர். கொழுத்தவர் வீட்டில் இரவெல்லாம் விளக்கெரிந்தது. நகைக்கடைகளில் கல்லா கட்டியது. ரோலேக்ஸ் கடிகாரங்கள் விற்று தள்ளின. Purgolax இல்லாமலே பல பேருக்கு நிற்கவில்லை.கௌண்ட மணியிடம் சுந்தர ராஜன் சொன்ன மாதிரி சிவப்பு கொடி காட்டி நிறுத்தி இருப்பார்களென்று என் கணிப்பு.

படித்தவர் கிளப்பிய புரளியில் வங்கி திறந்த நாளில் கூட்டம் அலை மோதியது. இருப்பவன் 
இல்லாதவன் அனைவரும் ஒரே வரிசையில். இல்லாள்களின் சுருக்கு பைகள் செல்லாத நோட்டுகளை கக்கின.  அஞ்சறைப்பெட்டியிலும்  அரிசி மூட்டையிலும் கருவுற்றிருந்த சேமிப்புகள் கருக்கலைப்பு செய்யப்பட்டன.

 வக்கிரம் பிடித்த மாந்தர் சிலர் வயிற்று பிழைப்புக்காக உடலை விற்றுப் பிழைக்கும் விலை மாதரிடம் தங்களது புத்திசாலித்தனத்தை காட்டினர். செல்லாத நோட்டுக்களை கொடுத்து காமப் பசியாறினர். விலை மாதரும் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்று வந்த காசை முடிந்தனர்.

பெட்ரோல் பங்கில் செல்லாது என்று சொல்லப்பட்ட 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதி சில்லறை கேட்டு அளப்பறை செய்தவர்கள் அநேகம்.
சுடுகாட்டில் அன்று வெந்த அனைத்துப் பிணங்களும் 500, 1000 என்றே கொண்டு வந்திருந்தன.
என்ன ஆச்சரியம் .. "சில்லறை இல்லேன்னா வண்டியில் ஏறாதே" என்று கறார் பேசிய நடத்துனர் அனைவரும் கணக்கு காட்டிய போது எல்லா நோட்டுகளும் செல்லாதவையாகவே இருந்தன.

வரிசையில் நின்று செய்வதறியாது கண் கலங்கும் மூதாட்டியின் வீடியோ ஊடகத்தை சங்கடப்படுத்தியது. வீடியோ எடுத்த மெத்தப் படித்தவர் அந்த கிழவியின் அவலத்தை எப்படி பிரபலமாக்குவது என்று யோசித்த நேரத்தில் சில்லரை கொடுத்து உதவியிருக்கலாம்.  

Saturday, March 11, 2006

World of Comics

Hi World,

It has always been my fancy to read a lot comics. Of late, the availability of high quality comics is limited and hence this mad rush for electronic versions of the same. I love the the comic project (tcp) and wish they come up with some real classics of times on the internet.

Ciao guys & gals soon